மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

அயர்லாந்தைப் பழிதீர்த்த பாகிஸ்தான்!

அயர்லாந்தைப் பழிதீர்த்த பாகிஸ்தான்!

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்குக் கடந்த ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க தனது முதல் போட்டியில் அயர்லாந்து பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இப்போட்டி கடந்த 11ஆம் தேதி அயர்லாந்தின் டப்ளின் நகரில் தொடங்கியது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சைத் தேர்வுசெய்தது. முதல் நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாளில் களமிறங்கிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பாகிஸ்தானின் அபார பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அயர்லாந்து தனது முதல் இன்னிங்ஸில் 47.2 ஓவர்கள் விளையாடி 130 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 180 ரன்கள் பின்தங்கிய அயர்லாந்து, ஃபாலோ-ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.

முதல் இன்னிங்சில் சொதப்பிய அயர்லாந்து வீரர்கள் இம்முறை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர் எட் ஜாய்ஸ் 43 ரன்களும், போர்ட்டர்ஃபீல்டு 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த கெவின் ஓ பிரைன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 186 பந்தில் 10 பவுண்டரியுடன் சதத்தைக் கடந்தார். டெஸ்ட் வரலாற்றில் அயர்லாந்து அணியின் முதல் சதமாக இது பதிவானது.

ஸ்டூவர்ட் தாம்சன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 339 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் முகமது அப்பாஸ் 5 விக்கெட்களும், முகமது ஆமிர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அயர்லாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அசார் அலி (2), ஹரிஸ் சோஹைல் (7), அசாத் ஷபிக் (1) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதன் பின் இமாம் உல் ஹக் உடன், பாபர் அசாம் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. அயர்லாந்து சார்பில் டிம் முர்டாக் 2 விக்கெட் வீழ்த்தினார். அயர்லாந்து அணியின் கெவின் ஓ பிரைன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்டை இந்தியாவுடன் வரும் ஜூன் 14 அன்று பெங்களூருவில் விளையாடுகிறது.

2007ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் கத்துக்குட்டியான அயர்லாந்து அணி, பலம் வாய்ந்த பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது. இதற்கு தற்போது அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் பழி தீர்த்துக் கொண்டது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon