சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு கதாநாயகர்கள் வருவது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, பிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து மற்றொரு கதாநாயகி அறிமுகமாகவுள்ளார்.
சிவகார்த்திகேயன், சந்தானம், மா.கா.பா ஆனந்த் என தமிழ் சினிமாவில் வலம்வரும் நடிகர்களின் பின்னணி சின்னத்திரைதான். ஆனால் நடிகைகளைப் பொறுத்தவரை வெள்ளித்திரையில் மார்க்கெட் குறைந்த பின் தொலைக்காட்சித் தொடர்களின் பக்கம் திரும்புவதே வழக்கமாக இருந்தது. இதை மேயாத மான் திரைப்படம் மூலம் மாற்றிக்காட்டினார் பிரியா பவானி சங்கர். தற்போது இதில் நடிகை வாணி போஜன் இணைந்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் வெளியான தெய்வமகள் தொடர் மூலம் கவனம் பெற்ற வாணி போஜன், லோகேஷ் இயக்கும் ‘என் 4’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். லோகேஷ் சுயாதீன திரைப்படமாக உருவாக்கிய ‘என் மகன் மகிழவன்’ பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது பெற்றுள்ளது.
சென்னை காசிமேடு பகுதியை கதைக் களமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அஸ்ஃபல் ஹமீத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுவும் சுயாதீன திரைப்படமாகவே உருவாக உள்ளது. தற்போது இதன் ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.