மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

கர்நாடகாவிலும் கூவத்தூர் பாணி!

கர்நாடகாவிலும் கூவத்தூர் பாணி!

கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 15) நடைபெற்றது. அதில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சியமைப்பதற்காக பாஜகவும், மஜத - காங்கிரஸ் கட்சிகளும் ஆளுநரிடம் தனித்தனியாக உரிமை கோரியுள்ளன.

இந்த நிலையில் கர்நாடகாவில் கடந்த 2008ஆம் ஆண்டு ‘ஆபரேஷன் கமல்’ என்னும் நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டது. அதாவது, எம்.எல்.ஏ.க்களை பாஜக பக்கம் (கமல் - தாமரை) இழுக்கும் திட்டம். இப்போதும் ஆபரேஷன் கமலைப் பயன்படுத்தி காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏ.க்களை பாஜகவுக்கு இழுக்கும் பணிகள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகின. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, “மீண்டும் ஆபரேஷன் கமலைக் கொண்டுவர பாஜக முயற்சிகளை மேற்கொள்கிறது. ஆனால், பாஜகவின் முயற்சிகள் ஒருபோதும் எடுபடாது” என்று குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தையே சித்தராமையாவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழகத்தின் கூவத்தூர் பாணி போல கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஆந்திரா அல்லது பஞ்சாப்பிலுள்ள விடுதிகளில் தங்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள் அரங்கேறிவரும் சூழ்நிலையில், இது குறித்து நகைச்சுவையாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ளது கேரள சுற்றுலாத் துறை. “கர்நாடகத் தேர்தல் முடிவுகள் சிக்கலான ஒரு சூழ்நிலையில் உள்ளன. ஆகவே, தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்துக் கர்நாடக எம்.எல்.ஏ.க்களையும் கடவுளின் தேசமான கேரளாவுக்கு நாங்கள் அழைக்கிறோம். இங்குள்ள ரிசார்டுகள் அனைத்தும் அழகானவை. அதே சமயத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடியவை” என்று குறிப்பிட்டுள்ளது.

காங்கிரஸ் - மஜத தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்றிரவு 10 மணியளவில் பெங்களூரு அசோகா ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, சிவக்குமார், மஜத தேசியத் தலைவர் தேவகவுடா, குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தற்போது அரசியல் சூழ்நிலைகள் குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் கமல்?

கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 79 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 65 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 58 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையில் காங்கிரஸும் மஜதவும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்தன. இது தரம் சிங் பார்முலா என்று அழைக்கப்பட்டது. ஆனால், 2006ஆம் ஆண்டு தரம் சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

2006ஆம் ஆண்டு பாஜக - மஜத கூட்டணி சேர்ந்து ஆட்சியமைத்தன. இதற்காக இரு கட்சிகளும் 20 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் முதல்வர் பதவியை வகிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் 2006ஆம் ஆண்டு பிப்ரவரியில் குமாரசாமி முதல்வராகப் பதவி ஏற்றார். 20 மாதங்கள் கழித்து 2007ஆம் ஆண்டு அக்டோபரில் பாஜகவுக்கு முதல்வர் பதவியை விட்டுத்தரக் கோரியபோது பதவி விலக மறுத்துவிட்டார் குமாரசாமி. இதனால் குமாரசாமிக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக விலக்கிக்கொண்டது.

பின்னர் இரு கட்சிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு 2007 நவம்பர் 12ஆம் தேதி எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்றார். ஏழு நாள்களே முதல்வராக இருந்த நிலையில், எடியூரப்பா ஆட்சியைக் கவிழ்த்தார் குமாரசாமி. இதனால் கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

2008ஆம் ஆண்டு மீண்டும் கர்நாடகாவுக்குச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான 112 இடங்களுக்கு மேலும் மூன்று எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பாஜகவுக்குத் தேவைப்பட்டது. இதனால் மஜத எம்.எல்.ஏக்கள் நால்வர், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மூவரைத் தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியமைத்தது பாஜக. இவர்கள் அனைவரும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இதுதான் ‘ஆபரேஷன் கமல்’ என்று கூறப்பட்டது. பாஜகவுடன் பிணக்கு ஏற்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு கர்நாடகா ஜனதா பக்சாவைத் தொடங்கிய எடியூரப்பா, ஆபரேஷன் கமலை நினைவுகூர்ந்து வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon