மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

இந்தியை அல்ல, இந்தியாவைப் பிரதிபலிக்கிறோம்: மோடி

இந்தியை அல்ல, இந்தியாவைப் பிரதிபலிக்கிறோம்: மோடி

‘இந்தி பேசும் மாநிலங்களை பாஜக பிரதிபலிக்கவில்லை; ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரதிபலிக்கிறது’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடகச் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்றபோதிலும் தனிப்பெரும்பான்மை பெறாததால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று (மே 15) நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித்ஷா, மோடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, “இது பாஜகவின் 15ஆவது வெற்றியாகும், பாஜக 14 தேர்தல்களில் இதுவரையில் வெற்றி பெற்று உள்ளது 15ஆவது தேர்தலிலும் பாஜக வெற்றியைத் தனதாக்கி உள்ளது. 2019ஆம் ஆண்டு தேர்தலில் மோடி தலைமையில் ஆட்சி அமைப்பதோடு மட்டுமல்லாமல், 2022ஆம் ஆண்டில் புதிய இந்தியாவையும் உருவாக்குவோம்” என்று தெரிவித்தார்.

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “பாஜகவை இந்தி பேசும் மாநிலங்களுக்கான கட்சி என்று கூறுகிறார்கள். கோவா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் எல்லாம் இந்தி பேசும் மாநிலங்களா? பாஜக இந்தியாவைப் பிரதிபலிக்கிறது.

கர்நாடக மக்களுக்கு எனக்கும் இடையே எந்தத் தடையும் இல்லை. அவர்கள் என்னிடம் காட்டும் பாசத்தை நான் எப்போதும் மதிக்கிறேன். கர்நாடக மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக தொண்டர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கன்னட மக்களின் வளர்ச்சியில் நாங்களும் பங்காற்றுவோம் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

அத்துடன், மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறைக்கு மோடி தனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon