மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

மண்டல அளவில் வெற்றி முகம்!

மண்டல அளவில் வெற்றி முகம்!

கர்நாடகாவின் கடற்கரையோர மற்றும் ஆந்திர எல்லையோரத் தொகுதிகளில் பெற்ற வெற்றிகளின் மூலமாக, சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளது பாஜக.

கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும், 2013ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றிகளின் அடிப்படையிலேயே இருந்தன. நகரங்களைக் குறிவைத்துப் பிரச்சாரத்தில் ஈடுபடும் பாஜகவின் அணுகுமுறையைப் பொறுத்து, பெங்களூருவைச் சுற்றியுள்ள தொகுதிகளில் மாற்றம் உண்டாகலாம் என்று கருதப்பட்டது. அதேபோல, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளையொட்டிய தொகுதிகளில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் கணிசமான அளவில் போட்டி இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது.

கர்நாடகாவின் தெற்கில் இருக்கும் மைசூர் பகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸ் கட்சியும் சமபலத்துடன் திகழும் என்றும், மத்திய கர்நாடகாவில் பாஜக பெருவெற்றி பெறும் என்றும் கூறப்பட்டது. முக்கியமாக, கடற்கரையோர கர்நாடகாவில் பாஜகவை காங்கிரஸ் கட்சி முந்திவிடும் என்று சொல்லப்பட்டது.

மே 12ஆம் தேதி வெளியான வாக்குக்கணிப்பு முடிவுகள், இதிலிருந்து பெருமளவில் வேறுபட்டிருந்தன. கடற்கரையோர கர்நாடகத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை பாஜக வீழ்த்தும் என்று சொல்லப்பட்டது. அப்பகுதிகளில் பாஜக மட்டுமல்லாமல் ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் மறைமுக பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், வாட்ஸ்அப் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் வழியே ஒவ்வொரு வீட்டிலுமுள்ள வாக்காளரை எளிதில் சென்றடைவதாகவும் இதற்குக் காரணம் கூறப்பட்டது. இது மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் பிரசாரகர்கள் ஒவ்வொரு குடும்பத்திலுமுள்ள உறுப்பினர்களை நேரில் சந்தித்து, பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியானது.

வெறும் தகவல்களான இவை, நேற்று வெளியான தேர்தல் முடிவுகளின் மூலமாக உண்மையாகியிருக்கின்றன. கடற்கரையோர கர்நாடகாவில் அதிக தொகுதிகளைப் பெற்றிருப்பதன் மூலமாக, நூறு என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது பாஜக. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளுக்கும் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக்கணிப்புகளுக்குமான வித்தியாசத்தை, இந்த மண்டலமே பெருமளவில் நிர்ணயித்துள்ளது.

கடற்கரையோரத்திலுள்ள 21 தொகுதிகளில் 18இல் பாஜகவும், மூன்றில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இந்து – முஸ்லிம் வேறுபாடு பற்றிய பிரச்சாரப் பேச்சுகளும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் குழுக்களின் இது பற்றிய கருத்துப் பகிர்வுகளும் பெருமளவு தேர்தலில் எதிரொலித்துள்ளன. கடந்த 2013 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பாஜக முறையே 13 மற்றும் ஐந்து இடங்களையும், இதர கட்சிகள் மூன்று இடங்களையும் பெற்றிருந்தன. இந்த வேறுபாடே, காங்கிரஸின் பின்னடைவுக்கு முக்கியக் காரணம்.

மகாராஷ்டிர எல்லையையொட்டிய 50 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் 30 இடங்களிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 17 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர்கள் இரண்டு இடங்களிலும், எஞ்சிய ஓர் இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர். 2013 தேர்தலில் இங்கு காங்கிரஸ், பாஜக கட்சிகள் முறையே 31 மற்றும் 13 தொகுதிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மஜக ஒரு தொகுதியிலும், இதர கட்சிகள் ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. இந்த முறை, இந்த நிலைமை தலைகீழாகியுள்ளது.

ஆந்திர எல்லையிலுள்ள தொகுதிகளில் 15இல் காங்கிரஸும், 12இல் பாஜகவும், நான்கு இடங்களில் மஜகவும் வெற்றி பெற்றுள்ளது.

மத்திய கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் முறையே 24 மற்றும் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

கர்நாடகாவின் தெற்குப் பகுதியிலுள்ள 51 தொகுதிகளில் 25இல் மதச்சார்பற்ற ஜனதா தளமும், 16இல் காங்கிரஸும், 9இல் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய முல்பகல் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2013 தேர்தலில் இந்தப் பகுதியில் இரண்டு இடங்களை மட்டுமே பாஜக பெற்றது.

பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள 36 தொகுதிகளில் 16இல் காங்கிரஸ் கட்சியும் 11இல் பாஜகவும், ஏழு தொகுதிகளில் மஜகவும் வெற்றி பெற்றுள்ளன.

ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் பலவற்றை இழந்துள்ளது காங்கிரஸ் கட்சி. கர்நாடகாவின் தெற்கு, கிழக்குப் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. இழந்த பெருமையை மீட்டெடுக்க, மண்டல அளவில் மீண்டும் அடிமட்ட அளவில் கட்சிப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது காங்கிரஸ்.

இந்தத் தரவுகள், வரவிருக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் குறித்த நேர்மறைப் பார்வையை பாஜகவினருக்கும், கடினமாக உழைக்க வேண்டிய அவசியத்தை காங்கிரஸ் கட்சியினருக்கும் அளித்துள்ளது.

படங்கள் நன்றி: இண்டியன் எக்ஸ்பிரஸ், நியூஸ் 18

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon