மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

பாலகுமாரன் மறைவு: திரையுலகினர் இரங்கல்!

பாலகுமாரன் மறைவு: திரையுலகினர் இரங்கல்!

‘இலக்கியம்தான் முக்கியம் என வாழ்ந்தவர்’ என நடிகர் ரஜினிகாந்த்தும், ‘ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர்’ எனக் கவிஞர் வைரமுத்துவும் பாலகுமாரன் மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரபல எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான பாலகுமாரன் சென்னை மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று (மே 15) காலமானார்.

அவரது மறைவுக்கு இலக்கியத் துறையினர், திரைத் துறையினர் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், பாலகுமாரனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாலகுமாரன் அவர்கள் என்னுடைய மிக நெருங்கிய நண்பர். கடந்த இரண்டு மூணு மாசத்துக்கு முன்னாடிகூட என் வீட்டுக்கு வந்து, பல மணி நேரம் என்னோடு பேசினார். அவரைப் பத்தி எல்லாருக்குமே தெரியும். எழுத்தாளர்; ஆன்மிகவாதி. பாட்ஷா படம் மிகப்பெரிய வெற்றியான பிறகுகூட அவரைச் சினிமாவுக்கு வரச் சொல்லி நிறைய முறை முயற்சித்தேன். இல்லை, இலக்கியம்தான் என்னோட உலகம். ஆன்மிகம்தான் என்னோட உலகம். சினிமாவுல அவ்வளவா ஈடுபட மாட்டேன்னு சொல்லி பணம், புகழ் என்று பார்க்காமல் இலக்கியம் தான் முக்கியம் என வாழ்ந்தவர். அவருடைய இந்த மரணம் எழுத்துலகுக்கே மிகப்பெரிய இழப்பு. அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தியடையன்னு சொல்லி நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன்” என்று கூறினார்.

ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர்

“பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின்மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிபட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்துகொண்டது. இரண்டு கைகளாலும் எழுதியவரைப் போல சிறுகதைகளையும் நாவல்களையும் சலிக்காமல் படைத்த சாதனையாளர் பாலகுமாரன். ‘பெண்களைப் புரிதல்’ என்ற ஒற்றை வரிக்கொள்கையை ஊடு சரடாக வைத்துக்கொண்டு அவர் படைத்த எழுத்து இன்னும் பல காலம் வாசிக்கப்படும்.

தொழில்நுட்பத்தின் வல்லாண்மையால் வாசிப்பை விட்டுத் தப்ப நினைத்த ஒரு தலைமுறையை, சட்டையைப் பிடித்து, ‘உட்கார்ந்து வாசி; பிறகு யோசி’ என்று உலுக்கியவர்களில் பாலகுமாரனும் முக்கியமானவர். சலிக்காத நடை அவரது நடை. கரையைத் தொட்டுக்கொண்டே நடக்கும் நதி மாதிரி கவிதையைத் தொட்டுக்கொண்டே நடந்த நடை அவரது உரைநடை.

தொடக்கத்தில் அவர் கவிதை எழுத வந்தவர்தான். கவிதையைவிடச் சந்தை மதிப்பு உள்ளது உரைநடைதான் என்பதை உணர்ந்து தெளிந்த அறிவாளி அவர்.

அவரது இரும்புக் குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், உடையார், கங்கைகொண்ட சோழன், கரையோர முதலைகள் போன்ற படைப்புகள் வாசகர்களை வசீகரித்தவை.

கலைத் துறையிலும் புகழ் பெறவே ஆசைப்பட்டார் இந்தப் பாலகுமாரன். கலைத்துறைக்குச் சென்ற எழுத்தாளர்களில் தங்கள் அறிவுக்குரிய நாற்காலியை அடைந்தவர்கள் குறைவு. புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, விந்தன், அகிலன் போன்ற பலரையும்கூட வெள்ளித் திரையுலகம் தள்ளியே வைத்திருந்தது. ஆனால், பாலகுமாரனுக்குத் திரையுலகம் வெற்றி கொடுத்தது. சிந்து பைரவி, நாயகன், காதலன், பாட்ஷா, இது நம்ம ஆளு போன்ற படங்களில் அவரது பங்களிப்பு அற்புதமானது.

மரணத்தை வெல்ல வேண்டும் என்பதே விஞ்ஞானத்தின் நீண்டநாள் விருப்பம். ஆனால், அந்தப் போட்டியில் விஞ்ஞானத்தைவிடக் கலைதான் வெற்றி பெற்றிருக்கிறது. தன் கலையை முன்வைத்து ஒரு படைப்பாளன் தன் மரணத்தை வென்றுவிடுகிறான். அந்த வகையில் பாலகுமாரன் தன் படைப்புகளால் மரணத்தை வென்று நீண்ட காலம் தமிழோடு வாழ்ந்திருப்பார்.

அவரது குடும்பத்தாரும் வாசகர் உலகமும் அமைதியுறுக என்று என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று வலைப்பக்கத்தில் பாலகுமாரன் மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

கவிஞரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து, “எழுத்துலகின் பல்கலைக்கழகம் திரு.பாலகுமாரன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாலகுமாரன் சார் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. என்னுடைய ஜனனம் திரைப்படம் சமூகப் பிரச்சினை குறித்து ஆழமாகப் பேசக்கூடிய படமென்பதால், அதற்காக மிகுந்த சிரத்தையுடன் பணிபுரிந்தனர். அந்தப் படத்தில் அவர் எழுதிய வசனங்கள் அனைத்தும் நினைவுகூரத்தக்கன. அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon