மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

ப்ளஸ் 2 ரிசல்ட்: அமைச்சர் அறிவுரை!

ப்ளஸ் 2 ரிசல்ட்: அமைச்சர் அறிவுரை!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 16) 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நிமிடங்களில் மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்குத் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்கள் எழுதினார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குர் வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை காலை 9.30 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில் மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றைப் பதிவிட்டு தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்குத் தேர்வு முடிவுகள் இரண்டு நிமிடங்களில் அனுப்பப்படும்.

வரும் 21ஆம் தேதி பிற்பகல் முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளிலோ, www.tnresults.nic.in என்ற இணையதளத்திலோ தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக வரும் 17ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் 19ஆம் தேதி (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க இயலும். விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடத்துக்கு தலா 550 ரூபாயும், பிற பாடங்களுக்கு தலா 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கு தலா இரு தாள்கள் கொண்ட பாடங்களான மொழிப் பாடங்கள் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு 305 ரூபாயும், ஒரு தாள் மட்டுமே கொண்ட பிற பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் அறிவுரை

தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “குறைந்த மதிப்பெண் மற்றும் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் தவறான முடிவுகளை மேற்கொள்ளக் கூடாது. மேலும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மனச்சோர்வுடன் காணப்படும் மாணவர்களைக் கண்டறிந்து ஆலோசனை வழங்க அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளன்று முகவாட்டத்துடன் காணப்படும் மாணவர்களைப் பெற்றோர்களும், அவர்களது நண்பர்களும் உடனிருந்து தன்னம்பிக்கை கொடுத்து ஆலோசனை வழங்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரையில், அனைத்து மாணவர்களுக்கும் நல்ல எதிர்காலத்தை அரசு உருவாக்கிவருகிறது” என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon