மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

காவிரி வழக்கு: இன்று விசாரணை!

காவிரி வழக்கு: இன்று விசாரணை!

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (மே 16) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்குகளை ஒன்றாக இணைத்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று முன்தினம் (மே 14) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான மத்திய நீர்வளத் துறை செயலாளர் யூ.பி.சிங், காவிரி வரைவுத் திட்டத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் குறிப்பிட்டார். மேலும், வாரியமா, குழுவா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு (மே 16) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். வரைவு திட்டத்தின் நகல் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (மே 15) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு திட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இன்று நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே ஆஜராகி வாதிடவுள்ளார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon