மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

அஞ்சலி: பாலா எனும் நரைச் சிறகு!

அஞ்சலி: பாலா எனும் நரைச் சிறகு!

ஸ்ரீராம் சர்மா

பாலகுமாரன் மறைந்துவிட்டார். இந்த செய்தியைக் கேட்டவுடன் எனக்குத் தோன்றியது, “பாலகுமாரன் இதை நம்பியிருக்க மாட்டார்”.

ஜன்னலோரம் அமர்ந்திருக்கிறோம். வானில் சிறகடித்துப் பறக்கும் அழகான பறவை ஒன்று கண்ணுக்குத் தெரிகிறது. பறவை நகர்ந்து ஜன்னலில் இருந்து மறைந்துபோகிறது.

அந்தப் பறவை, ஜன்னலில் இருந்தும் - நம் கண்களில் இருந்தும்தான் மறைந்திருக்கிறதே தவிர இன்னமும் விண்ணில் தவழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

விண்ணைக் காணும் உயரமும் திறனும் நமக்கு வாய்க்குமேயானால் தவழும் பறவையைக் கண்டுவிடலாம். அல்லாதபோது, “பறவை மறைந்துவிட்டது” என்று அறிவித்தால் அதைத் தவழும் பறவை நம்பாது. பாலகுமாரன் எப்படி நம்புவார்?

பாலகுமாரன் அவர்களின் எழுத்து வன்மையைக் குறித்து எவ்வளவோ சொல்லலாம். இப்படியும்கூட ஒருவர் பரபரத்து எழுதித் தள்ள முடியுமா என்னுமளவுக்கு மூச்சை எழுத்தாக்கி ஓயாமல் உழைத்துக்கொண்டே இருந்தவர் பாலகுமாரன்.

பாலகுமாரன், தன் படைப்புள்ளத்தைவிட, படைப்புக்குள் கனன்று எரியும் தன் உழைப்பையே அதிகம் கொண்டாடியிருக்கிறார் என்றே கணிக்க முடிகிறது.

விலங்கினங்களில் அமர்தலறியாமல் ஓயாது உழைக்கும் குதிரையைத்தான் அவர் தேர்ந்தெடுத்து ஆராதித்திருக்கிறார்.

சொல்லப்போனால் சிறுகதைகளைவிட உழைப்பை அதிகம் கோரும் நாவல்கள் எழுதத்தான் அதிகம் விரும்பியிருக்கிறார். ஏறத்தாழ 274 நாவல்கள். உடையார் போன்ற பெரும் படைப்புகள் எல்லாம் சேர்த்தால் ஏறத்தாழ லட்சம் பக்கங்களுக்கும் மேல்...

பாலாவின் பக்கங்கள் தோறும் மானுடம் கொண்டாடப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டிலும், போதும் போதுமெனுமளவுக்குப் பெண்கள் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள்.

எதிர்த்து, ஏகடியம் செய்து, கருத்தைத் திரித்து, கலகமெழுதியெல்லாம் கடந்தவரில்லை பாலகுமாரன்.

மாறாக, வாழ்கையை அதன் போக்கில் வாழ்ந்து, வருவதை எதிர்கொண்டு, காற்றடிக்கும் திக்கிலெல்லாம் தன் நோக்கத்தைத் திருப்பிக்கொண்டு, எந்த நேரமும், எது குறித்தும் தயங்கி நின்று வீழ்ந்துவிடாமல், எழுந்து எழுந்து பயணப்படத் தெரிந்த சாதுர்யமான நரைச் சிறகு பாலகுமாரன்.

மரணத்தையும்கூடத் தனக்கு வாய்த்த புதியதோர் திக்காக எண்ணி, தொடர்ந்தபடியே இருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

மரணம் என்பது துக்ககரமானதா? ஏன் அது கொண்டாடப்பட வேண்டியதோர் விடுதலை சாஸனமாக இருக்கக் கூடாது?

தவிக்க தவிக்கவிட்டுப் பின் சரேலென வெளியேறும் ஒரு தும்மலுக்குப் பிறகான நிம்மதிதான் மரண சுகமாக இருக்குமோ என்றுகூட யோசித்திருக்கிறேன்.

தும்மி முடித்த சுகம் கபாலமெங்கும் விர்ரென்று சுற்றிப் பரவி வந்து, மெல்ல மெல்ல வடிந்து நிற்கும் அந்த ஏகாந்தம் தவழும் எக்ஸ்ப்ரஷனை என் தந்தையின் முகத்தில் கண்டிருக்கிறேன்.

ஆம், விவரத்தோடு வாழ்ந்து முடிப்பவர்களுக்கு மரணம் என்பது ஒரு விடுதலை விண்பொறியாகக்கூட அமையக்கூடும். சம்பந்தப்பட்டவர்கள் உறுதிப்படுத்தாதவரை மரணம் என்பதைத் தூற்றாமல் இருப்பதே நியாயம்.

வயோதிகத்திலும் வாசகர்களுக்காகத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர், தன் உடல்நலம் குறித்த கழிவிரக்கத்தோடுதான் விடைபெற்றிருக்கிறார்.

“பாலாவோடு இனி யாரும் பேச முடியாதே...” என்று சுற்றம் குறைபட்டுக்கொள்ளலாம். “பாலாவை, இனி யாரும் தொல்லை செய்துவிட முடியாது” என்கிறது மரணம்.

எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்

எல்லாம் சிவமயமே யாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

(கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா. கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: [email protected])

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon