மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

சோலார் துறையில் இந்தியா ஆதிக்கம்!

சோலார் துறையில் இந்தியா ஆதிக்கம்!

சர்வதேச அளவில் சோலார் சந்தையில் இந்தியா மூன்றாவது மிகப்பெரிய நாடாகத் திகழ்வதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

மெர்காம் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2010ஆம் ஆண்டை ஒப்பிடும் து 2017ஆம் ஆண்டில் சோலார் சந்தையில் 170 சதவிகித வளர்ச்சியுடன் உலகின் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 9.6 கிகா வாட் அளவிலான மின் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது 2016ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட 4.3 கிகா வாட் அளவிலான மின் திட்டங்களை விட இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாகும். இதன் மூலம் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள மொத்த சோலார் திட்டங்களின் அளவு (2017 டிசம்பர் வரை) 19.6 கிகா வாட்டாக அதிகரித்துள்ளது. அதேபோல, சோலார் மேற்கூரைத் திட்டங்களின் மொத்த அளவு 1.6 கிகா வாட்டாக இருக்கிறது. இதில் 995 மெகா வாட் அளவிலான சோலார் மின் திட்டங்கள் சென்ற 2017ஆம் ஆண்டில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் சோலார் துறையினருக்கு உதவும் வகையில் சோலார் உபகரணங்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்தது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்னுற்பத்திப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2022ஆம் ஆண்டுக்குள் 175 கிகா வாட் அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் மெர்காம் நிறுவனத்தின் ஆய்வறிக்கை இந்தியாவுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்திருக்கும். சோலார் மின் உற்பத்தியில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகள் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon