மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

நோயாளி வேடத்தில் செல் திருடன்!

நோயாளி வேடத்தில் செல் திருடன்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளி போல் உள்ளே சென்று டாக்டர் மற்றும் செவிலியர்களின் செல்போன்களைத் திருடிச் சென்ற மர்ம நபர் ஒருவர் சிசிடிவி கேமரா மூலமாக மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார் அந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிளைப் பார்த்தபோது அதில், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்குக் கடந்த 12ஆம் தேதி மதியம் ஒரு டிப்டாப் ஆசாமி உள்ளே வருகிறார். அப்போது பணியில் பெண் மருத்துவர் ஒருவர் மேஜை மீது கைப்பேசியும் வாட்டர் பாட்டிலும் வைத்தபடி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டுள்ளார்.

நோயாளியாக வந்த அந்த மர்ம நபர் அமரும் ஸ்டூலில் அமருகிறார். மருத்துவர் அவசரக் கேஸைப் பார்க்க எழுந்து விசாரித்துக் கொண்டிருந்தபோது, அந்த நபர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மேஜை மீதிருந்த செல்போனை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பதற்றமில்லாமல் நடந்துசெல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

புதுநகர் காவல் நிலைய போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்தனர். அந்த நபர் கடலூர் கம்பியாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவர் மதுவுக்கு அடிமையானவர் என்று தெரிந்தது. குடிப்பதற்கான செலவுக்காகவே அவர் இப்படித் திருடுகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர் புதுச்சேரி எல்லையில் இருக்கும் சாராயக் கடையில் திருடிய செல்போன்களை விற்றுள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீஸார் திருடிய செல்போனைப் பெற்றுக்கொண்டு அவரை எச்சரித்து அனுப்பி விட்டனர்.

திருடனைப் பற்றி விசாரித்ததில் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கைவரிசைகளைக் காட்டியுள்ளதும், கிருஷ்ணா மருத்துவமனையில் திருட முயன்றபோது பிடிபட்ட அவருக்கு மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon