மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

பாஜகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும்!

பாஜகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும்!

‘அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும்’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் சிறப்பு நிகழ்வாகப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2018ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று (மே 15) சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அம்பேத்கர் சுடர் விருது கேரள முதல்வர் பினராயி விஜயன், பெரியார் ஒளி விருது ஆந்திராவைச் சேர்ந்த மக்கள் பாடகர் கத்தார், காமராஜர் கதிர் விருது தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், காயிதே மில்லத் பிறை விருது ‘வைகறை வெளிச்சம்’ இதழாசிரியர் மு.குலாம் முகமது, அயோத்திதாசர் ஆதவன் விருது மருத்துவர் அ.சேப்பன் (மறைவுக்கு பின்), செம்மொழி ஞாயிறு விருது ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கேரளா முதல்வர் சார்பாக அம்பேத்கர் சுடர் விருதை கே.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ரவிக்குமார், “காரல் மார்க்ஸ் 200ஆவது பிறந்த நாளில் நீலமும் சிவப்பு ஒன்று சேரவேண்டிய காலம் இது. இந்த மேடையே அரசியல் அணி சேர்க்கைக்கான மேடை” என்று கூறினார்.

அதன் பிறகு விருது பெற்ற அனைவரையும் பாராட்டி பேசிய திருமாவளவன், “காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மதவாத சக்திகளுக்கெதிராக ஒன்றிணைய வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், “இந்த மதச்சார்பற்ற கூட்டணி முன்னெடுப்பை காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டும்” என்றும் “இதைச் செய்யாவிட்டால் நாடு மிகப்பெரிய பாசிசத்தில் சிக்கிக்கொள்ளும், மதவாத பாசிசத்தை முறியடித்து அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

இறுதியாக, ஜூன் அல்லது ஜூலையில் ‘தேசம் காப்போம்’ என்ற தலைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மாநாடு நடைபெறும் என்றும் அதில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் மாநாட்டு அறிவிப்பை வெளியிட்டார் திருமாவளவன்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon