மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: விஜய் தந்தைக்கு எடப்பாடி தூது!

டிஜிட்டல் திண்ணை: விஜய் தந்தைக்கு எடப்பாடி தூது!

மொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“சென்சார் போர்டில் படம் பார்த்து ஓகே ஆகியிருக்கிறது டிராபிக் ராமசாமி என்ற படம். விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிப்பில், விக்கி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது டிராபிக் ராமசாமி. நிஜ டிராபிக் ராமசாமியாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். டிராபிக் ராமசாமி படத்தின் டீஸரைக் கடந்த வாரத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ். வெளியிட்டார். அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது சென்சார் போர்டும் சான்று கொடுத்துவிட்டது.

ஜூன் மாதம் ரிலீசுக்கு நாள் குறித்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தமிழக அமைச்சர் ஒருவர் இன்று படக் குழுவில் உள்ள ஒருவரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். ‘உங்க படத்துல தமிழக அரசுக்கு எதிரான காட்சிகள் நிறைய இருக்குன்னு சொல்றாங்க... எங்க ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் மிக சிறப்பாக போய்ட்டு இருக்கு. ஏன் இப்படியெல்லாம் படம் எடுக்குறீங்க?’ என்று கேட்டாராம். அதற்கு சம்பந்தப்பட்டவரோ, ‘படத்தை பார்க்காமல் இப்படி சொல்லாதீங்க சார். இது டிராபிக் ராமசாமி சாரோட வாழ்க்கை வரலாறு. அவருக்கு யாரெல்லாம் தொல்லை கொடுத்தாங்களோ அதையெல்லாம் படத்தில் காட்டியிருக்கோம். மத்தபடி உங்களை விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் எல்லாம் எங்களுக்கு இல்லை’ என்று சொன்னாராம்.

அதற்கு அந்த அமைச்சர், ‘எஸ்.ஏ.சந்திரசேகரன் சாரை முதல்வர் பார்க்கணும்னு ஆசைப்படுறாரு. நீங்க சொன்னால் அவரை சந்திக்க உடனே அப்பாயின்மெண்ட் போட்டுடலாம்...’ என்று சொல்லவும், ‘அவரு எதுக்குங்க முதல்வரை சந்திக்கணும்? என்ன காரணத்துகாக பார்க்கணும்னு சொன்னால் அவருகிட்ட பேசிட்டு சொல்றோம்’ என்று சொல்லிவிட்டாராம். இந்த தகவல் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. ‘என்னை எதுக்காக முதல்வர் பார்க்க ஆசைப்படுறாரு? படம் பார்க்க விரும்பினாருன்னா போட்டுக் காட்டலாம்...’ என்று சிரித்திருக்கிறார் சந்திரசேகரன்.

இதை சந்திரசேகரன் வேறு மாதிரியாக பார்ப்பதாக சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ‘ஏற்கெனவே விஜய் நடிப்பில் தலைவா படம் வந்தபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அதை எதிர்த்தார். படத்தின் போஸ்டரில் இருந்த ‘டைம் டூ லீட்’ என்ற வாசகத்தை அகற்றச் சொல்லி தலைவா டீமுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அந்த வார்த்தைகளை நீக்கிய பிறகுதான் படத்தையே ரிலீஸ் செய்ய விட்டார்கள். இப்போது அப்படியான ஒரு மறைமுக மிரட்டலைத்தான் விஜய் அப்பாவுக்கு விட்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே கமல் கட்சி தொடங்கிவிட்டார். ரஜினி தொடங்கப்போவதும் நிச்சயமாகிவிட்டது. இன்னொரு பக்கம் விஜய் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டதாக அவரது ரசிகர்கள் மத்தியில் பேச்சிருக்கிறது. பல மாவட்டங்களில் விஜய் பூத் கமிட்டிகள்கூட அமைத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வந்துட்டால், அது தங்களுக்கு இன்னும் பாதிப்பை உண்டாக்கும் என எடப்பாடி கணக்குப் போடுகிறார்.

இப்போது வரப் போகும் டிராபிக் ராமசாமி படம் தமிழக அரசையும், காவல் துறையையும் கடுமையாக அட்டாக் செய்யும். அந்த அட்டாக் என்பதை விஜய்யின் அட்டாக் ஆகத்தான் பார்க்கிறார்கள் அதிமுகவினர். அதனால்தான், இப்போதே சந்திரசேகரனை அழைத்துப் பேசி, படத்தில் அரசாங்கத்தை விமர்சனம் செய்வது போல இருக்கும் காட்சிகளை நீக்கச் சொல்வதுதான் எடப்பாடியின் திட்டம். அதற்காகத்தான் அவரைக் கூப்பிட்டிருக்கிறார்.

இந்தத் தகவல் விஜய் கவனத்துக்கும் போனது. ‘அதெல்லாம் நீங்க யாரையும்போய் பார்க்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம்...’ என விஜய் சொல்லிவிட்டாராம் என்று சொன்னார்கள் இந்த விவரங்களை அறிந்தவர்கள்” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், “கடந்த வாரத்தில்தான் இரும்புத் திரை படத்துக்கு முதல்வர் எடப்பாடி ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார் என விஷால் டீம் உட்பட பலரும் சந்தோஷப்பட்டார்கள். ஒரு வாரம்கூட ஆகவில்லை, அதற்குள் விஜய் அப்பா படத்துக்கு மறைமுகமாக எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மட்டுமல்ல... விஜய் நடிப்பில் இப்போது தயாராகிக்கொண்டிருக்கும் பெயர் வைக்காத படத்திலும் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக முதல்வருக்குத் தகவல் போயிருக்கிறது. எல்லாவற்றையும் பேசத்தான் சந்திரசேகரனைக் கூப்பிட்டதாகவும் சொல்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் எடப்பாடியைப் பார்க்க சந்திரசேகரன் போகவில்லை!” என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது.

புதன், 16 மே 2018

அடுத்ததுchevronRight icon