ஐஏஎஸ் தேர்வில் தோல்வி அடைந்தவரைப் பாராட்டிய அமைச்சர்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ், தோல்வி அடைந்தவரை தொகுதி எம்.எல்.ஏவும் , கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் பாராட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட சின்னகல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் பச்சையப்பன், செண்பகவள்ளி மகன் யுவராஜ் தான் ஐ.ஏ.எஸ், தேர்வில் வெற்றிபெற்றுவிட்டதாகத் பொய்யான தகவல்களை வாட்ஸ்அப் மூலம் பரப்பி உள்ளார்.
இதனைத்தொடர்ந்து அந்த தொகுதி எம்.எல்.ஏ, பன்னீர்செல்வம் நேரடியாகச் சென்று சால்வைபோட்டு பாராட்டியுள்ளார், இதனை அடுத்து ,திருவண்ணாமலையில் அரசு விழாவில் கலந்துகொண்ட கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் யுவராஜை பாராட்டி வாழ்த்திப் பேசியுள்ளார், ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் ஐ.ஏ.எஸ், தேர்வில் பெற்றுவிட்டான் என்று சமூக ஆர்வாளர்களும் வீடு தேடிச்சென்று பாராட்டி ஊக்குவித்து வருகிறார்கள்.
ஆனால் உண்மையில் யுவராஜ் ஐ.ஏ.எஸ், தேர்வு எழுதினாரா, ஐ.ஏ.எஸ், தேர்வில் வெற்றிபெற்றது உண்மையா என்று பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் எழுந்தன.
யுவராஜ் உண்மையில் ஜஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றாரா என்பதை உறுதிபடுத்த மின்னம்பலத்தின் செய்தியாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அரசு அலுவலகங்களிலும் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அடைய வைத்தன.
2018ல் வெளியான யூ.பி.எஸ்.சி, தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் யுவராஜ் பெயர் இடம் பெறவில்லை.
ஐ.ஏ.எஸ், தேர்வு எழுதி ரிசல்ட் வெளியானதும் மாநில உளவுப் பிரிவும் மத்திய உளவுப் பிரிவினரும் அலசி ஆராய்ந்து ரிப்போர்ட் அனுப்புவது ஒரு நடைமுறையாகும், ஆனால் யுவாராஜ் பற்றி மேலிடத்திலிருந்து எந்தவிதமான ரிப்போர்ட் கேட்கவில்லை என்று உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாம் நேரடியாக யுவராஜ் கை பேசியில் தொடர்புகொண்டு, கேட்டதற்கு ஐ.ஏ.எஸ், தேர்வில் வெற்றிபெற்றதாக நீங்களே வாட்ஸ்-அப்பில் தகவல் பரப்பிவிட்டது குறித்து கேட்டோம். நீங்கள் தேர்வே எழுதச் செல்லவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளதே என்றும் கேட்டதற்கு அவர் தான் சாதி சான்று சமர்ப்பிக்கவில்லை என்பதால்அவர் பெயரை நிறுத்தி வைத்துள்ளதாக கூறினார்
தமிழ் நாட்டுகாரார்களும் எழுதியிருக்கிறார்கள் அதில்
பலர் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் அதில் உங்களுக்கு அறிமுகமானவர்கள் டெல்லியில் தேர்வுக்கு எழுதவந்தவர்களில் யாரையாவது சொல்லமுடியுமா? தஞ்சாவூர் சிவகுரு பிரபாகரன் என்னோடா தேர்வு எழுதியவர்தான் அவரைக்கேட்டாலே தெரியுமே என்றவரிடம் அவரது கை பேசி எண் கொடுங்கள் என்றோம்.
அவர் அனுமதியில்லாமல் அவர் கை பேசி எண் கொடுக்கக்கூடது என்று கூறி எண் தர மறுத்து விட்டார்..
நாம் அதற்குள் சிவகுரு ஐ.ஏ.எஸ், அவர்களைத் தொடர்புகொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் யுவராஜ் வெற்றிபெற்றதாகச் சொல்கிறார்கள், உங்களுக்கு அவரைத் தெரியுமா என்று கேட்டோம்.அப்படி யாரும் தெரியவில்லை அவர் படம் இருந்தால் அனுப்புங்கள் பார்த்து
சொல்கிறேன் என்றார், நாம் உடனே யுவராஜ் படத்தை அனுப்பினோம், படத்தைப்பார்த்தவர் இவரை எந்த இடத்திலும் பார்க்கவில்லை என்றார்.
மறுபடியும் யுவராஜை தொடர்பு கொண்ட முயற்சித்தோம் ஆனால் முடியவில்லை