மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

நான் அரசியலுக்குப் புதியவனல்ல: உதயநிதி ஸ்டாலின்

நான் அரசியலுக்குப் புதியவனல்ல: உதயநிதி ஸ்டாலின்

“நான் எப்போதிலிருந்தே அரசியலில் இருந்துவருகிறேன். என் தாத்தாவிற்கும் அப்பாவுக்கும் தேர்தலில் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனால் நான் அரசியலில் இருப்பதை மக்கள் இப்போதுதான் பார்க்கிறார்கள்” என்று நடிகரும் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். தி இந்து ஆங்கில நாளிதழுக்கு இன்று (மே15)அளித்த பேட்டியில் குடும்ப அரசியல், தனது அரசியல் ஆர்வம் ஆகியவை பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்.

“அரசியல் குடும்பத்தில் பிறந்த என்னால் அரசியலை எப்படித் தவிர்க்க முடியும். வேறு கட்சியில் இணைந்திருந்தால் இந்தப் பேச்சு வந்திருக்காதோ? எனது கட்சியில் நான் ஏதும் பதவி கேட்டதும் இல்லை, தேர்தலில் நிற்க சீட் கேட்டதும் இல்லை” என்றவர், தான் மிகக் குறுகிய காலத்திலேயே மக்கள் கவனம் பெற்றதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள்தான் விமர்சனம் செய்கிறார்கள் என்று கூறினார்.

“கட்சித் தலைவரின் பேரன், செயல் தலைவரின் மகன் என்பதைச் சாதகமாக கூற முடியாது. அதில் சில பாதகங்களும் இருக்கின்றன. கட்சியில் ஒருவர் தீவிரமாக வேலை செய்தால் அவருக்குப் பாராட்டு கிடைக்கிறது. ஆனால் என் விஷயத்தில் அரசியல் வாரிசு என்ற காரணத்தால் அது மறுக்கப்படுகிறது. என் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை” என்று குறைபட்டுக்கொண்டார்.

அரசியல் வாரிசு என்றால் அப்பா ஸ்டாலின் எப்போதோ தலைவர் ஆகியிருப்பார். அவரது கடின உழைப்பால் மெதுவாக முன்னேறி இருக்கிறார் தலைவரின் மகன் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பொறுமையும் கடின உழைப்பும்தான் அப்பாவின் தகுதிகள். அந்தத் தகுதிகள் அவருக்குப் பதவியை தந்தன என்று சொன்ன உதயநிதி, “என் அப்பா இளைஞர் அணிச் செயலாளராக இருந்து ராஜினாமா செய்தபோது, அந்தப் பதவி எனக்குக் கிடைக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், அப்படி நடக்கவில்லையே. 2016இல் நடந்த ஆயிரம் விளக்கு சட்ட மன்ற தொகுதியில் என் சார்பாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். ஆனால் கட்சியிலிருந்து எனக்கு சீட் வழங்கப்படவில்லை” என்றார். கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நம்மைக் கட்சியின் மேலிடத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூன்றாம் கலைஞரே என்று புகழ்ந்து பேனர் வைக்கப்பட்டது பற்றிய கேள்விக்கு, “சில ஆர்வமிகுந்த தொண்டர்கள் அப்படியான பேனர்களை வைத்துள்ளனர். நான் அவர்களிடம் கண்டிப்புடன் தெரிவித்துவிட்டேன். அந்த பேனரை அகற்றாவிட்டால் நான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டேன். பெரிய தலைவர்களுடன் ஒப்பிடும் அளவிற்கு எனக்குத் தகுதி கிடையாது. தனிப்பட்ட முறையில் அவர்களை அழைத்து பேனரை அகற்றச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

இது தொடர்பாக, திமுக இளைஞர் அணியின் துணைச் செயலாளர் மகேஷ் பொய்யாமொழி, “உதயநிதி அவர்களின் வருகையை வரவேற்கிறோம். அவர் முகஸ்துதியையும் தனித்துப் பிரித்துப் பார்ப்பதையும் விரும்பாதவர் என்று எனக்குத் தெரியும்” என்று கூறினார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon