மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

சென்னையில் அதிகரிக்கும் போதைப் பொருள் கடத்தல்!

சென்னையில் அதிகரிக்கும் போதைப் பொருள் கடத்தல்!

சென்னையை மையமாக வைத்து நடக்கும் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்திருப்பதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் முக்கிய போதைப் பொருளாகக் கருதப்படும் கோகைன், வெளிநாடுகளிலிருந்து கடல் வழியாகவும் வான்வழியாகவும் கடத்திவரப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்திவரப்பட்ட 11.8 கிலோ கோகைனை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2016ஆம் ஆண்டு 3.6 கிலோ கோகைனும், 2017ஆம் ஆண்டு 8.8 கிலோ கோகைனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2018ஆம் ஆண்டில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 11.8 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளைவிட தற்போது போதைப் பொருள் கடத்தல் 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1.25 கோடிக்கு வாங்கும் கோகைன், சர்வதேச சந்தையில் ரூ. 3 கோடி அளவிற்கு விற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாகவும், இதனைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் தென் அமெரிக்க போதைப் பொருள் கடத்தல் கும்பல் சென்னையை மையமாக வைத்து கொச்சி, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் விற்பனை செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தென் அமெரிக்காவில் புதிதாக உருவாகியுள்ள கடத்தல் கும்பல் இந்தியாவிற்குள் போதைப் பொருள் கடத்துவது தெரியவந்துள்ளது. இந்தக் கடத்தலைத் தடுக்கக் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் பிரேசில் நாட்டிலிருந்து ரூ.5.5 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருளைக் கடத்திவந்த வெளிநாட்டு நபரைக் காவல் துறையினர் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon