மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

சிறப்புக் கட்டுரை: சக்கைபோடு போடும் டீ தொழில்!

சிறப்புக் கட்டுரை: சக்கைபோடு போடும் டீ தொழில்!

சுனீரா டாண்டன்

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘சாய் பாயின்ட்’ நிறுவனம் இந்தியாவில் பெங்களூரு, மும்பை, புனே, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் டீ விற்பனைத் தொழிலை நடத்தி வருகிறது. சாய் பாயின்ட் நிறுவனம் ஒரே சுற்றில் 132 கோடி ரூபாய் நிதியைத் திரட்டியுள்ளதாக ஏப்ரல் 19ஆம் தேதியன்று அந்நிறுவனம் கூறியிருந்தது. இந்த முதலீட்டில் பாரகன் பார்ட்னர்ஸ், சாமா கேப்பிடல், டிஎஸ்ஜி ஆகிய நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளதாக சாய் பாயின்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சாய் பாயின்ட் நிறுவனம் 2010ஆம் ஆண்டில் பெங்களூருவில் தொடங்கப்பட்டது. தற்போது சாய் பாயின்ட் நிறுவனம் அதன் 100 விற்பனை நிலையங்களிலும் தினசரி சுமார் 3,00,000 கோப்பைகள் தேநீரை விற்பனை செய்கிறது. மேலும், மிகப்பெரிய எண்ணிக்கையிலான தேநீரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்கிறது. இந்நிறுவனத்தின் தேநீர் விற்பனை இயந்திரங்கள் பல அலுவலகங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

சாய் பாயின்ட் நிறுவனத்தின் துணை நிறுவனரும், தலைமைச் செயலதிகாரியுமான அமுலீக் சிங் பஜ்ரல் பேசுகையில், “நிறுவனத்தைப் பல வழிகளிலும் சந்தைப்படுத்தும் மூலோபாயத்தை வலுப்படுத்துவதே இந்த நிதி திரட்டும் சுற்றின் நோக்கமாகும்” என்று கூறினார்.

நகர்ப்புறங்களில் வாழும் அதிக சம்பளம் வாங்கும் மக்கள், சுவையான டீயைப் பருக நிறைய செலவிட முன்வருகிறார்கள். ஆகையால் டீ விற்பனை நிலையங்களில் நடக்கும் தொழில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டீ விற்பனை நிறுவனம்தான் ‘சாயோஸ்’. சாயோஸ் நிறுவனம் மார்ச் மாதத்தில் அஜய் கவுல் என்பவரைத் தன் தலைமை ஆலோசகராக நியமித்தது. அஜய் கவுல் ஜுபிலண்ட் ஃபுட் வொர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இந்தியத் தலைவராக பொறுப்பு வகித்தவர். ஜுபிலண்ட் நிறுவனம் அமெரிக்காவின் பீட்சா விற்பனை நிறுவனமான டாமினோஸை இயக்கி வருகிறது. சாயோஸ் நிறுவனத்துக்கு டைகர் குளோபல் என்ற முதலீட்டு நிறுவனத்திடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சாயோஸ் நிறுவனம் 300 டீ விற்பனை நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது சாயோஸ் நிறுவனத்துக்கு 50 விற்பனை நிலையங்கள் உள்ளன.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பெரிய பெரிய பான விற்பனை நிறுவனங்களும்கூட டீ விற்பனைத் தொழிலை குறி வைத்துள்ளன. மும்பையைத் தலைமையிடமாக வைத்து இயங்கும் நுகர்பொருள் பெரு நிறுவனம் இந்துஸ்தான் யூனிலிவர். இந்நிறுவனம் ‘ப்ரூக் பாண்ட்’ மற்றும் ‘ரெட் லேபிள்’ ஆகிய டீ பிராண்டுகளை நடத்தி வருகிறது. 2015ஆம் ஆண்டில் இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் ’தாஜ் மஹால் டீ ஹவுஸ்’ என்ற உயர்தர டீ விற்பனை நிலையத்தை அமைத்தது. டாடா குளோபல் பிவரேஜஸ் நிறுவனம் பெங்களூருவில் ‘சாய்-உன்சாய்’ என்ற கஃபேவைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

எதற்காக டீ விற்பனை இந்தியாவில் பெரும் தொழிலாக உருவெடுத்துள்ளது?

இந்தியா பாரம்பரியமாக டீயைப் பருகி வந்த நாடு. இந்தியர்கள் பெரும்பாலும் டீயை விரும்புகின்றனர். ஒரு கப் காபிக்கு முப்பது கப் டீயை இந்தியர்கள் பருகுகிறார்கள். மிண்டெல் ஆய்வு நிறுவனத்தின் தகவலின்படி, 2017ஆம் ஆண்டில் 678,200 பேக்கேஜ் செய்யப்பட்ட டீயை இந்தியா பருகியுள்ளது. இதன்படி, உலகின் மிகப்பெரிய தேநீர் சந்தையாக இந்தியா உள்ளது.

நடைபாதை வியாபாரிகள் சராசரியாக 50 மில்லி கப் டீயை ஐந்து ரூபாய்க்குக் கூட விற்பனை செய்கிறார்கள். எனினும் காபி விற்பனை நிறுவனங்களே நாடு முழுவதும் பல்கிப் பெருகியுள்ளன. உலகளவில் பிரபலமான ஸ்டார் பக்ஸ், கோஸ்டா காபி போன்ற நிறுவனங்களும், இந்தியாவின் கஃபே காபி டே போன்ற நிறுவனங்களும் காபி தொழிலில் சிறப்பாக இயங்கி வருகின்றன. காபி விற்பனை நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் சில்லறை டீ விற்பனை இன்னும் மேம்படுத்தப்படாமலேயே உள்ளது. இருப்பினும், சாய் பாயின்ட், சாயோஸ் போன்ற நிறுவனங்களின் வருகையால் கடந்த சில வருடங்களில் டீ விற்பனையிலும் நிலவரம் மாறியுள்ளது.

டெலாய்ட் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரரான அனில் தல்ரெஜா பேசுகையில், “டீ விற்பனையில் இந்நிறுவனங்கள் புதுமைகளைப் புகுத்தி, வித்தியாசமான யோசனைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன. மாறிவரும் இளம் தலைமுறையினரின் விருப்பங்களும் இவர்களின் தொழிலுக்கு உதவிபுரிகிறது” என்று கூறினார்.

வெளியே உணவு அருந்தவும் பானங்களைப் பருகவும் பணத்தைச் செலவிட இந்தப் புதிய தொகுப்பிலான நுகர்வோர் விருப்பம் காட்டுகின்றனர். சாய் பாயின்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி பஜ்ரல் பேசுகையில், “டீ விற்பனைச் சந்தை இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தாலும்கூட, இதில் செலவிடப்படும் தொகை உண்மையாகவே அதிகரித்துவிட்டது. முக்கியமாக உணவு மற்றும் பானங்களுக்காக அதிகமாகச் செலவிடப்படுகிறது” என்று கூறினார். இந்தியாவில் உணவுச் சேவைகளின் சந்தை மதிப்பு 48 பில்லியன் டாலராக வளர்ச்சியடைந்திருப்பதை பஜ்ரல் சுட்டிக்காட்டினார்.

இதனோடு, அதிகம் சம்பளம் வாங்குவோர் டீயைப் பருக தெருக் கடைகளில் இருந்து விற்பனை நிலையங்களுக்கு மாறி வருகின்றனர். இதே நிலை காபி தொழிலிலும் ஏற்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது. ஆக, இத்தொழிலில் தங்களது பங்கைப் பதிவு செய்ய முதலீட்டாளர்களும் முன்வருகின்றனர்.

நன்றி: குவார்ட்ஸ்

தமிழில்: அ.விக்னேஷ்

நேற்றைய கட்டுரை: ஃபிளிப்கார்ட் - வால்மார்ட் ஒப்பந்தம்; பல கோடிகளில் லாபம்!

மின்னஞ்சல் முகவரி: [email protected]

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon