மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

நஷ்ட ஈடு தந்த பிறகும் லாபம் பார்த்த ரஜினி

நஷ்ட ஈடு தந்த பிறகும் லாபம் பார்த்த ரஜினி

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 71

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் தளபதி பட வெற்றிக்குப் பின் திரையரங்குகளில் வசூல் சக்கரவர்த்தியாக ரஜினிகாந்த் இருந்தார். படையப்பா வெற்றிக்குப் பின் வெளிவந்த பாபா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ரஜினிக்கு எதிராக பாமக தொடர்ந்து குரல் கொடுத்துவந்தது. எனவே, பாமக பலமாக இருக்கும் பகுதிகளில் பாபா படத்தைத் திரையிட தியேட்டர் உரிமையாளர்களிடம் தயக்கம் இருந்தது. இருப்பினும் உரிய பாதுகாப்புகளுடன் படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுவந்தது. தங்கள் எதிர்ப்பையும் பலத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் பாமகவுக்கு இருந்தது. மனைவி லதா நெருக்கடியை எளிதாக சமாளித்த ரஜினி, பாமகவின் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், பதில் சொல்லாமல் தவிர்த்துவந்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் என்னும் பகுதியில் ஜனகர் திரையரங்கில் பாபா வெளியீடு என அறிவிக்கப்பட்டிருந்தது. பாமகவினர் பலம் மிக்க அமைப்பாக இருந்த ஊர் அது.

2002இல் டிஜிட்டல் தொழில்நுட்பம் இல்லை. பிரிண்ட் முறை அமலில் இருந்தது. படம் வெளியான அன்று ஜனகர் தியேட்டருக்கு பிரிண்ட் கொண்டுவரப்பட்ட 10ஆவது நிமிடத்தில் பாபா படப்பெட்டி பாமகவினரால் தியேட்டரிலிருந்து கடத்தப்பட்டது. உடனடியாகச் சென்னைக்கு தகவல் கூறப்பட்டு 8 மணி நேரத்தில் படப்பெட்டி விமானத்தில் ஜெயங்கொண்டம் வந்து சேர்ந்தது. அதற்குள் பாபா வெற்றிப் படம் இல்லை என்கிற தகவல் தமிழகம் முழுவதும் பரவியிருந்தது.

பாமகவினரால் முந்திரிக் காட்டுக்குள் தூக்கிச் செல்லப்பட்ட பாபா படப் பெட்டியைக் காவல் துறை கடைசி வரை கண்டுபிடிக்கவில்லை.

சச்சிதானந்த ஸ்வாமிகள் உடலுடன் அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் நல்லடக்கம் முடிந்தவுடன் இந்தியா திரும்பினார்.

பாபா பட வசூல் விவரங்களை நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள் மூலம் கேட்டறிந்த ரஜினி நஷ்டக் கணக்கை முழுமையாகத் தயார் செய்யுமாறு கூறினார்.

கடந்த கால் நூற்றாண்டில் தமிழ் சினிமாவில் பல சம்பவங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்ற படம் பாபா.

படத்தை அவுட்ரேட் முறையில் விற்பனை செய்துவிட்டால் அதன் பிறகு ஏற்படும் லாப, நஷ்டங்களுக்குத் தயாரிப்பாளர் பொறுப்பல்ல என்பதுதான் நடைமுறை.

ஆனால் ரஜினிகாந்த், நஷ்டப்பட்ட அனைத்து விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என இரு தரப்புக்கும் நஷ்டத் தொகையை (கேசட் விற்பனை பாக்கியையும் சேர்த்து) திருப்பிக் கொடுத்துப் புதிய உதாரணத்தை ஏற்படுத்தினார்.

இதனால் ரஜினி மீதான மரியாதை திரையுலகில்அதிகரித்தது. அதனால்தான் ரஜினி நாயகனாக நடிக்கும் படங்கள் நஷ்டம் ஏற்படுத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ரஜினி அந்த நஷ்டத்தைத் தர வேண்டும் எனக் குரல் கொடுக்கின்றனர் .

பாபா படத்தில் நஷ்டத் தொகையைத் திருப்பிக் கொடுத்திருந்தாலும் அப்படம் ரஜினிக்கு லாபத்தைக் கொடுத்த படம்.

சினிமா மீது அலுப்பும் சலிப்பும் ஏற்பட்ட காரணத்தால் இரண்டு வருடங்களாக புதிய படங்கள் எதிலும் ரஜினி நடிக்கவில்லை.

ரஜினி அவ்வளவுதான் என ஏளனமாகப் பொதுவெளியில் விமர்சிக்கப்பட்டார்.

பாபா படம் ஓடவில்லை. ஆனாலும், நஷ்டத் தொகையைத் திருப்பிக் கொடுத்த பின்னரும் லாபம் கிடைத்தது எப்படி என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினார் ரஜினி

குறைவான சம்பளம், குறுகிய நாட்களில் படப்பிடிப்பு என்பதை அமல்படுத்தினால் நஷ்டம் வராது; தனக்கான வசூல் குறைவில்லாமல் வந்திருப்பதால் பட்ஜெட்டில் கவனம் செலுத்தினால் வெற்றி எளிது என்பதைப் புரிந்துகொண்டார்.

அதனைப் பரிசோதனை செய்ய அவர் தேர்ந்தெடுத்த நிறுவனம் சிவாஜி புரொடக்‌ஷன்ஸ். மன்னன் படத்திற்குப் பின் ஒரு படம் நடித்துத் தருவதாக அவர்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை தூசி தட்டினார் ரஜினி.

பாபாஜி என்பவர் இமயமலைக்கு அப்பால் இன்றைக்கும் இருப்பதாகத் தான் நம்புவதை சினிமா மூலம் மக்களிடம் கொண்டுசெல்ல பாபா படத்தின் மூலம் முயற்சித்தார் ரஜினி. அதற்கு வெற்றி கிட்டவில்லை.

சாமியாக வணங்கிய பாபா தன் வெற்றிக்கு உதவவில்லை; பேயாவது உதவுமா என ரஜினி தேர்வு செய்த படம் வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘ஆப்த மித்ரா’. தமிழில் ‘சந்திரமுகி’.

ரஜினிகாந்த் வெற்றி பெறப் பேய் உதவியதா? 48 நாட்களில் தயாரிக்கப்பட்ட சந்திரமுகி சந்தித்த சங்கடங்களும் சாதனைகளும் நாளை பகல் 1 மணிக்கு.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62 பகுதி 63 பகுதி 64 பகுதி 65 பகுதி 66 பகுதி 67 பகுதி 68 பகுதி 69 பகுதி 70

திங்கள், 14 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon