மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 14 டிச 2019

அமலாக்கத் துறையின் பிடியில் ஏர் இந்தியா!

அமலாக்கத் துறையின் பிடியில் ஏர் இந்தியா!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்ட 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான 111 ஜெட் விமானங்கள், லாபகரமான பயணப் பாதைகள் கைவிடப்பட்டது மற்றும் விமானங்கள் புறப்படும் நேரங்கள் திருத்தப்பட்டது குறித்துக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து அமலாக்கத் துறையினர் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஒப்பந்தங்கள் இறுதிசெய்யப்பட்டது பற்றியும், அவை நடைமுறைப்படுத்தப்பட்டது பற்றியும் தற்போது அமலாக்கத் துறை ஆய்வு செய்து வருகிறது. மேலும், தனியார் விமான நிறுவனங்கள் லாபம் அடையும் விதமாக, லாபகரமான பயணப் பாதைகள் ஒப்படைக்கப்பட்டது பற்றியும், விமான நேரங்கள் திருத்தியமைக்கப்பட்டது பற்றியும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அமலாக்கத் துறை ஆய்வு செய்து வருகிறது. இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிதியின் அளவீடு குறித்து இனி ஆய்வு தொடங்கப்படும். மேலும், இத்துறை சார்ந்த நிபுணர்களும் விசாரணையில் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த விவகாரம் குறித்து 2017ஆம் ஆண்டு மே 29ஆம் தேதியன்று சிபிஐ மூன்று முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்திருந்தது. இதையடுத்து தற்போது அமலாக்கத் துறை தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. 2007ஆம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனமும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைக்கப்பட்டது குறித்த ஒரு விசாரணையையும் சிபிஐ தொடங்கியுள்ளது. போயிங் நிறுவனத்திடமிருந்து 68 விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிதலுக்கு 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதற்கு அடுத்த ஆண்டிலேயே ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 43 விமானங்களை வாங்க இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 14 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon