மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 29 மே 2020

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்த ரஜினி

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்த ரஜினி

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 69

இராமானுஜம்

சிலர் தன்னுடைய துறையில் முதலிடத்தில், ஜாம்பவான்களாக இருப்பார்கள். ஆனால் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகளோடு இருப்பார்கள். வீட்டாரின் போக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பார்கள். ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி, தவறாக இருந்தாலும் உடன்பட்டுவிடுவார்கள். அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழி ரஜினிகாந்த்துக்கு ரொம்பவும் பொருந்திப்போனது, லதா ரஜினிகாந்த் முயற்சியால்.

பாபா முத்திரை, படத் தலைப்பு இவற்றை முன் அனுமதியின்றிப் பயன்படுத்தக் கூடாது என்று பத்திரிகைகளில் வழக்கறிஞர்கள் பெயரில் விளம்பரம் வெளியானது. இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் சீர்காழியில் லதா ரஜினிகாந்த் கொடும்பாவியை ரஜினி ரசிகர் மன்றத்தினர் எரித்தனர். மாநிலம் முழுவதும் லதாவுக்கு எதிரான மனநிலையில் ரசிகர்கள் பேசியும், ரஜினிக்குக் கடிதமும் அனுப்பி வந்தனர். இவை அனைத்தும் ரஜினி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டாலும் ரஜினி எந்த எதிர்வினையும் செய்யவில்லை; நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனக்கு பாதிப்போ, பலனோ இல்லாத எந்தச் சம்பவத்திலும் தலையிடாமல், மெளனமாக இருந்து விடுவது ரஜினி வழக்கம்.

பாபா பட விஷயத்தில் லதா ரஜினிகாந்த் நடவடிக்கைகள், வியாபாரத் தகவல்கள் அனைத்தும் தினந்தோறும் ரஜினிக்கு கிடைத்துவந்தன. படப்பிடிப்பு முடியும் தறுவாயில் பாபா படத்துக்கான ஆடியோ கேசட் விற்பனை மூலம் மிகப் பெரும் வசூல் வேட்டை நடத்தத் திட்டமிட்டார் லதா. அப்போது CD வடிவில் ஆடியோ வெளியிடாத காலம். 35 ரூபாய்க்கு கேசட்டுகள் கடைகளில் விற்கப்பட்டுவந்தன. கேசட் அல்லது வனொலி மூலம் மட்டுமே திரைப்பட பாடல்களை கேட்டு ரசிக்கும் வசதி இருந்தது. தற்போது போன்று தொழில்நுட்ப வசதியும், வளர்ச்சியும் இல்லாத காலம். முன்னணி நடிகர்கள் படத்தின் ஆடியோ கேசட்டுகள் முதல் நாளே விற்றுத் தீர்ந்துவிடும்.

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி என்பதால் பாபா படத்தின் ஆடியோ கேசட்டுக்கு எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்ட லதா தியேட்டர்கள் மூலம் மார்க்கெட் விலையைவிட அதிக விலைக்கு விற்க ஏற்பாடு செய்தார். இதுபோன்ற வியாபாரத்துக்காக முன்பணம் வசூல் செய்வது, அப்போதைய தமிழ் சினிமாவில் பிரபலம் என்கிறார் கேசட் விற்பனையில் பாதிக்கப்பட்ட தியேட்டர் உரிமையாளர் ஒருவர்.

2002இல் ரஜினி செல்வாக்குக்கு உரிய வகையில் கேசட்டுகள் விற்பனையாகியிருந்தன. இரு மடங்கு கேசட்டுகள் விற்பனை ஆகாததால் அதற்கு உரிய பணத்தை தியேட்டர் உரிமையாளர்கள் கேட்கத் தொடங்கினார்கள். அதே நேரம் பாபா முத்திரையை வைத்து பாபா துணிக்கடை, பாபா பேக்கரி என கடைகள் தொடங்க, வியாபாரத் தொடர்புகளை லதா பேசத் தொடங்கிய தகவல் ரஜினிகாந்த் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதை எப்படிக் கட்டுப்படுத்துவது, ஒழுங்குபடுத்துவது என்பது தெரியாமல் திகைத்தாலும் நெருக்கமான நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார்.

லதாவின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தாவிட்டால் உங்களது புகழுக்கு இழுக்கு நேரும் என அவர்கள் சுட்டிக் காட்டியதால் லதாவின் தலையீட்டை, தொடரும் வசூல் வேட்டையைத் தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டார் ரஜினி. இதுவரை வசூலித்த அல்லது பொதுவான விஷயங்களைத் தான் பார்த்துக்கொள்வதாக உத்திரவாதம் கொடுத்தாராம் ரஜினிகாந்த். ஆனால், தலைக்கு மேல் வெள்ளம் வந்துவிட்டதைத் தாமதமாகத்தான் உணர்ந்தார் ரஜினி.

குறுகிய நாட்களில் பாபா படத்தின் மூலம் கோடிக்கணக்கான பணத்தைத் தன் வசப்படுத்தியிருந்தார் லதா ரஜினிகாந்த். ஊருக்கெல்லாம் டாட்டா காட்டிவந்த ரஜினி, தான் ஏமாந்துவிட்டோமா, ஏமாற்றப்பட்டோமா என யோசிக்கத் தொடங்கினார். வெளியாட்களிடம் தோற்கவில்லை, மனைவியிடம்தானே தோற்றுப்போனோம் எனச் சமாதானமடைந்தார்.

லதாவிடமிருந்து பல விஷயங்களை அறிந்துகொண்டார் ரஜினி. தனது பெயரைக் கூறிப் பட வெளியீட்டுக்கு முன் கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமல்ல, தன் ரசிகனையும் எளிதாக ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கலாம் என்பதை அனுபவரீதியாகக் கற்றுக்கொண்ட ரஜினி, பட வெளியீட்டுக்குப் பின் ஏற்படப்போகும் பல்வேறு சட்டப் பிரச்சினைகளின் மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளப்போவதை அறிந்திருக்கவில்லை.

இதற்கிடையில் சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற பாபா ப்ரீமியர் காட்சியை தொடங்கி வைக்க அமெரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்ட ஸ்வாமிஜி, விழா நடைபெற்ற நள்ளிரவு மரணமடைந்தது ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் விளைவுகள் நாளை 1 மணி அப்டேட்டில்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62 பகுதி 63 பகுதி 64 பகுதி 65 பகுதி 66 பகுதி 67 பகுதி 68

வெள்ளி, 11 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon