மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 14 டிச 2019

டெங்கு: தொடர்ந்து முதலிடத்தில் தமிழகம்!

டெங்கு: தொடர்ந்து முதலிடத்தில் தமிழகம்!

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம்தான் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மழைக் காலங்களில் பரவும் டெங்கு போன்ற தொற்று நோய்கள் தற்போது ஆண்டு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றன. நாடு முழுவதும் கடந்த ஆண்டு (2017) டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாகத் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 1.53 லட்சம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். தமிழகத்தில் மட்டும் 22 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு, 52 பேர் இறந்துள்ளனர். இதில் டெங்கு பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என இரண்டிலுமே தமிழகம் முதலிடத்தில் இருந்ததாக மத்திய, மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடப்பாண்டின் தொடக்கத்திலிருந்தே டெங்கு காய்ச்சலின் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் தமிழகத்தில், டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

நாட்டிலேயே அதிகமாகத் தமிழகத்தில்தான் 1,451 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழகத்திற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் மாநிலத்தில் 1,266 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது.

கடந்த ஆண்டு டெங்கு பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருந்த கேரளாவில் இந்த ஆண்டு இதுவரை 402 பேருக்கு டெங்கு பாதித்துள்ளதாகவும், புதுச்சேரியில் 114 பேருக்குப் பாதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களில் மட்டும் 5,613 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

"டெங்குவைப் பரப்பும் ஏடிஎஸ் கொசுகளின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனைத்துக் கால நிலைகளிலும் அதன் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தமிழக அரசின் சார்பில் டெங்கு கொசுகளை அழிப்பதற்கான நடவடிக்கைகள் சுகாதார பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் அனைத்துச் சிகிச்சை வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. எனவே பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்" என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 9 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon