மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

அரசியல், குடும்ப நெருக்கடியில் ரஜினி

அரசியல், குடும்ப நெருக்கடியில் ரஜினி

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 67

இராமானுஜம்

தமிழ்த் தொலைக்காட்சிகள் பலவும் தனி மனிதத் துதி பாடலுக்கும் அரசியல் சாடலுக்குமான வடிவமாக அரசியல் கட்சிகள் நடத்தும் சேனல்களால் மாற்றப்பட்டுவிட்டன.

கால் நூற்றாண்டுக்கு முன்பாகவே அறிவு சார்ந்த விவாதங்கள் நடைபெறும் மேடையாகப் பட்டி மன்ற வடிவத்தைத் தமிழகம் முழுவதும் கொண்டுசென்றவர் மறைந்த குன்றக்குடி அடிகளார். இவர் நடுவராகப் பொறுப்பேற்று நடைபெறும் பட்டிமன்றங்களில் பங்கேற்க தமிழ் அறிஞர்கள் மட்டுமல்ல, தமிழ்ப் பற்று கொண்ட அரசியல் தலைவர்களும் ஆர்வம் காட்டியது உண்டு. காவி உடை அணிந்து வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட் கொள்கைகளை மேடைகளில் வழிமொழிந்த அடிகளார் "உலகத்திலேயே தமிழர்களைப் போல சகிப்புதன்மையும், பொறுமையும் எவரிடமும் இல்லை” என்பதைப் பேசத் தவறியதில்லை. அந்த சகிப்புதன்மையும், பொறுமையும் இருப்பதால்தான் தமிழக மக்கள் இன்று வரை நடிகர்களை உச்ச நட்சத்திரமாக ஆராதிக்கிறார்கள்.

தமிழர்களைப் போல ரஜினிகாந்த் இருப்பதால்தான் தன் இமேஜ், வியாபார முக்கியத்துவத்தைப் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தும் லதா ரஜினிகாந்த்தின் அத்துமீறலை எதிர்க்க முடியாமல் மௌன பாபாவாக இன்று வரை இருக்கிறார். பாபா படத்திற்கான அரங்கில் கதை நிகழும் சூழல், காலம் இவற்றுக்குப் பொருந்தாத குளிர் பான நிறுவனங்களின் விளம்பரங்களைக் கண்டு கண்கள் சிவந்த ரஜினி நிர்வாகத் தயாரிப்பாளர் வி.ஏ.துரை பக்கம் திரும்ப அவர் சுரேஷ் கிருஷ்ணாவைப் பார்க்க, அவரோ, இதை வைக்கச் சொன்னது லதா ரஜினிகாந்த் என்பதைத் தயக்கத்துடன் கூறினார்.

நிலைமையைப் புரிந்துகொண்ட ரஜினி ஆச்சாரமும், பழமையும் கொண்ட அரங்கமாக இது இருக்க வேண்டும் என அனைத்தையும் அப்புறப்படுத்தச் சொன்னார். என் அனுமதி இன்றி எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்பதை உறுதிபடக் கூறியதால் லதா ரஜினிகாந்தால் இயக்குநர் மூலம் எதையும் சாதிக்க முடியவில்லை. படப்பிடிப்பு முடிந்து படம் பார்த்த பின்னர் தான் ஸ்பான்சர் நிறுவனங்கள் தனக்கு நெருக்கடி கொடுக்கும் என்பதால் தற்காலிக நிம்மதிக்கு வந்தார் லதா ரஜினிகாந்த்.

திட்டமிட்ட அடிப்படையில் படப்பிடிப்பை ரஜினி தொடங்கினார், அவரது கவனம் முழுவதும் தினசரி ஷூட்டிங்கில் இருக்க லதா ரஜினிகாந்த் பாபா முத்திரை தொடங்கி அப்படத்தின் பெயரில் என்னவெல்லாம் வியாபாரம் செய்யலாம் என்பதில் தீவிரமாக இருந்தார். பாபா பனியன், பாபா தொப்பி, பாபா சட்டை, பாபா மணிக்கட்டுப் பட்டை எனத் திட்டமிட்டு விற்பனைக்குக் கொண்டுவந்தார். பாபா படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் அப்போது ஏகப் பிரபலம். அந்தப் புகைப்படத்தைக் கடை விளம்பரங்களில் பயன்படுத்தக் கட்டணம் என பாபா படம் சம்பந்தபட்ட அனைத்து விஷயங்களிலும் காசு பார்த்தார் லதா ரஜினிகாந்த். இது ரஜினிகாந்த் ரசிகர்களிடமும், அவரை ரசிக்கும் பொதுமக்கள் மத்தியிலும் சலிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

படையப்பா படத்திற்குப் பின் ரஜினி நடித்து தயாரிக்கும் படம் என்பதால் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றது. அந்த நேரத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை அவரது வீட்டில் ரஜினி சந்தித்தார். இதனை அறிந்த திமுக தலைவர் கருணாநிதி தானும் ரஜினியை சந்திக்க வேண்டும் என்று தகவல் அனுப்பினார். படப்பிடிப்பு முடிந்து பார்க்கிறேன் எனத் தகவல் அனுப்பினார் ரஜினி. கருணாநிதி ரஜினியை சந்திப்பதன் மூலம் ரஜினி யார் பக்கமும் இல்லை என்பதைத் தமிழக அரசியல் களத்தில் உறுதிப்படுத்த விரும்பினார். தொடர்ந்த அழைப்பு காரணமாக கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்தார் ரஜினி. அதனால் ஏற்பட்ட பாதிப்பினால் பாபா படத்தில் ‘இப்ப ராமசாமி’ என்ற கேரக்டரை உருவாக்கினார் ரஜினி.

குடும்பம், அரசியல் என அனைத்து தரப்பினரால் ஏற்பட்ட மன உளைச்சல் பாபா படத்தில் அவரது முகத் தோற்றத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. ஒரு வழியாகப் படப்பிடிப்பை நடத்தி முடித்த ரஜினிகாந்த் படத்தை வெளியிடும் முன் சென்னை சத்யம் தியேட்டரில் ப்ரீமியர் காட்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார். பாபா படத்திற்கு முன்னதாக தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியா, சிங்கப்பூர் இரு இடங்களிலும் நட்சத்திரக் கலை விழா நடத்தியது. அதில் ரஜினி, கமல் இருவரும் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெருக்கத்தின் அடிப்படையில் கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர்களுக்கு அழைப்பு அனுப்பினார் ரஜினிகாந்த். எந்த நடிகரும் வரவில்லை, வந்த நடிகர் கமல்ஹாசன் படத்தின் இடைவேளையில் வெளியேறினார். இது ரஜினிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. தனது ஆன்மிக குருவை அமெரிக்காவிலிருந்து, அழைத்து வந்திருந்தார். நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றி ப்ரீமியர் ஷோவைத் தொடங்கிவைத்தார். பாபா மீது பக்தி கொண்ட ரஜினிகாந்த்துக்கு மறுநாள் அதிர்ச்சியான தகவல் அதிகாலையில் கூறப்பட்டது. அப்படி என்ன தகவல்?

நாளை மதியம் 1 மணிப் பதிப்பில்

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62 பகுதி 63 பகுதி 64 பகுதி 65 பகுதி 66

புதன், 9 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon