மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 14 டிச 2019

பெட்ரோல் விலை உயராததற்குக் காரணம்!

பெட்ரோல் விலை உயராததற்குக் காரணம்!

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருக்கிறது. கர்நாடகத் தேர்தலை முன்னிட்டே இவற்றின் விலை உயர்த்தப்படவில்லை என்ற கருத்து நிலவும் நிலையில், வாடிக்கையாளர்களின் சுமையைக் குறைக்கவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் விலை பெரும்பாலும் உயர்த்தப்பட்டே வந்தது. இந்நிலையில் ஏப்ரல் 24ஆம் தேதி முதலே பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் ஒரே விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மே 12 முதல் 15 வரை கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலை முன்னிட்டே பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படாமல் உள்ளது என்ற கருத்து உள்ளது. மேலும், கச்சா எண்ணெய்யின் விலை 80.56 டாலராக உயர்ந்துள்ள போதும் பெட்ரோலியப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால் மத்திய அரசுக்கு ஆதரவாக எண்ணெய் நிறுவனங்கள் விலை மாற்றம் செய்யாமல் இருக்கின்றன என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்பரேஷன், மக்களுக்கு ஆதரவாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்று காரணம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மே 8ஆம் தேதி ஏசியன் ஏஜ் ஊடகத்திடம் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் சிங் பேசுகையில், “சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் நமக்கு ஆதரவாக இல்லை; மிக அதிகமாக உள்ளது. அதன் தாக்கத்தை மக்கள் மீது சுமத்த விரும்பவில்லை. எனவே சிறிது காத்திருக்க முடிவு செய்துள்ளோம். மிக அதிக விலையேற்றத்தால் மக்கள் அச்சத்துக்கு உள்ளாகிவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.77.43 ஆகவும், டீசல் விலை ரூ.69.56ஆம் நீடிக்கிறது. டெல்லியில் பெட்ரோல் ரூ.74.63, டீசல் ரூ.65.93 ஆகவும், மும்பையில் பெட்ரோல் ரூ.82.48, டீசல் ரூ.70.20 ஆகவும், பெங்களூருவில் பெட்ரோல் ரூ.75.82, டீசல் ரூ.67.05 ஆகவும் உள்ளது.

புதன், 9 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon