மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

தாய் பலாத்காரம் : மருத்துவமனையில் குழந்தை!

தாய் பலாத்காரம் : மருத்துவமனையில் குழந்தை!

டெல்லியில் ஓடும் காரில் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து அவரது மூன்று வயதுக் குழந்தையை வெளியே தூக்கி வீசிய பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.

2012ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 13 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று (மே 7) மாலை டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் 26 வயதுடைய பெண் ஒருவரை இரண்டு பேர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளனர். தொடர்ந்து அந்தப் பெண்ணின் மூன்று வயதுக் குழந்தையை இருவரும் முசாஃபர்நகர் பகுதியில் காரிலிருந்து வெளியே தூக்கி வீசியுள்ளனர்.

இதையடுத்து முசாஃபர்நகர் மக்கள் அக்குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிவிட்டு அந்தப் பெண்ணை சாப்பார் பகுதியில் மர்ம நபர்கள் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர் என்று எஸ்பி ஓம்பிர் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில், “ஆர்.கே. மேத்தா என்பவர் தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக மதுவை அருந்தவைத்து அவரும் அவரது நண்பரும் தன்னை வன்புணர்வு செய்தனர்” என்று புகார் அளித்துள்ளார்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 34 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon