மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 16 செப் 2019

ஆபாசத்தைத் திணிக்காதீர்கள்!

ஆபாசத்தைத்  திணிக்காதீர்கள்!

ஆபாசத்தைத் திணிக்கும் ’இருட்டறையில் முரட்டு குத்து,' போன்ற படத்தை தடை செய்ய வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இருட்டறையில் முரட்டு குத்து படத்திற்குப் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் திரை துறையிலும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்குத் திரை ஊடகத்தைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள் என்று இயக்குநர் பாரதிராஜா விமர்சித்துள்ளார் .

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மே 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் ஏற்படுத்தி வரும் பண்பாட்டு சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன. மக்களை மிக எளிதில் சென்றடைவதற்கான ஊடகமாகக் கருதப்படும் திரைப்படங்கள் சமூக சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களைத் திணிப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த திரைப்படம் வெளியானதுமே சமூக ஆர்வலர்கள் பலரும் என்னை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, அந்தப் படத்தால் ஏற்பட்டுள்ள சமூக சீரழிவுகள் பற்றி விளக்கியதுடன், இதைக் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலும், அந்தப் படத்தின் தலைப்பு வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தில் இருந்தும் அப்படம் எவ்வளவு மோசமான ஆபாசக் களஞ்சியமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.

இதே வழியை மற்ற இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பின்பற்றத் தொடங்கினால் இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.

தமிழகம் இப்போது மிகவும் கடினமான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி பாசன மாவட்டங்களை சீரழிக்கும் வகையிலான மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், நியூட்ரினோ ஆய்வு மையம், ஸ்டெர்லைட் ஆலை என மத்திய அரசால் திணிக்கப்படும் அழிவுத் திட்டங்கள், அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக மக்களும், இளைஞர்களும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த உணர்வுகளை மழுங்கடிக்கும் வகையில் இதுபோன்ற ஆபாசப் படங்கள் வெளியிடப்படுவதை அனுமதிக்க முடியாது. இது மிகவும் ஆபத்தான கலாச்சாரம்; இது தடுக்கப்பட வேண்டும்.

திரைப்படங்கள் மிகவும் சிறப்பான கலை வடிவம் ஆகும். அதை சமுதாயத்தைக் கெடுக்கும் களையாக மாற்றிவிடக்கூடாது. இதுபோன்ற திரைப்படங்களை திரைப்பட தணிக்கைச் சான்று வாரியம் எவ்வாறு அனுமதிக்கிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தான் திரைப்படங்களுக்கு எதிரானவன் அல்ல என்று விளக்கமளித்துள்ள ராமதாஸ், “சில மாதங்களுக்கு முன் ‘அப்பா’ என்ற படத்தைப் பார்த்தேன். கல்வி எந்த அளவுக்கு சுகமானதாகவும், சுமையற்றதாகவும், விளையாட்டு மற்றும் நீதிபோதனையை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்ற பாமகவின் கொள்கையை விளக்கும் வகையில் இருந்தது. அதேபோல், நான் பார்த்த தர்மதுரை என்ற திரைப்படம் மருத்துவர்கள் எந்த அளவுக்கு மக்கள் நலன் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை வழங்கியது. இதற்காக அப்படங்களின் இயக்குநர்கள், மற்றும் தயாரிப்பாளர்களை பாராட்டினேன். மேற்கண்ட அத்தனைப் படங்களும் கூட்டாக ஏற்படுத்திய நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் இந்த ஒரு படம் வெளியாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. இத்தகைய சூழல் மாற்றப்பட வேண்டும்.

மது, புகை மற்றும் பிற போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளை விட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்தி விடும். இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களை பார்ப்பதிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon