மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

தமிழக சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு!

தமிழக சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு!

காஷ்மீரில் உயிரிழந்த சென்னை இளைஞர் திருமணியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அங்குள்ள தமிழக சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேயான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சில நாட்களுக்கு முன்னர் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார். இதற்குக் கண்டனம் தெரிவித்து பிரிவினைவாதிகள் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கல்வீச்சுத் தாக்குதல் நடைபெற்றது. பர்காம் மாவட்டத்தில் சுற்றுலாப் பேருந்து மீது நடைபெற்ற தாக்குதலில் சென்னையில் இருந்து சென்ற திருமணி என்ற இளைஞர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்குள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த அம்மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி திருமணியின் தந்தை ராஜவேலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கல்வீச்சுத் தாக்குதலில் சுற்றுலாப் பயணி உயிரிழந்ததை அடுத்து, காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி முதல்வர் மெஹபூபா முஃப்திக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருமணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் திருமணியின் உடலை சென்னை கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளதாவும், காஷ்மீர் அரசு உதவியுடன் டெல்லியில் இருந்து திருமணியின் உடல் சென்னை கொண்டுவர தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தமிழகத்தைச் சேர்ந்த 130 பேர் தற்போது காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தமிழகம் திரும்ப தேவையான உதவிகளை டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக 011-24193100, 011-24193200 ஆகிய தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழக சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பாக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் காஷ்மீர் முதல்வரிடம் கேட்டுக்கொண்டதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் கண்டனம்

முதல்வர் மெஹாபூபா முஃப்தி காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்; ஆனால் கல்வீச்சு சம்பவத்தில் சுற்றுலாப் பயணி திருமணி இறந்திருக்கிறார்; எனவே காஷ்மீர் அரசு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அதோடு பயங்கரவாதிகள் வலிமையாக இருப்பதற்கு பாதுகாப்புப் படைகள் பொறுப்பேற்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon