மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

நீட் தேர்வில் வங்க மொழி புறக்கணிப்பு: மம்தா

நீட் தேர்வில் வங்க மொழி புறக்கணிப்பு: மம்தா

நீட் தேர்வில் வங்க மொழி புறக்கணிப்பட்டது உள்ளிட்ட குளறுபடிகள் தொடர்பாக மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த மே 6ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கேரளா, பஞ்சாப் போன்ற வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல், மதுரையில் மதுரை நரிமேடு பகுதியில் அமைந்துள்ள நீட் தேர்வு மையத்தில் 120 தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழில் வினாத்தாள் தராமல் ஆங்கிலம், இந்தியில் வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 24 மாணவர்களுக்கு தாமதமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட விடைத்தாள் வழங்கப்பட்டு தேர்வு தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 96 மாணவர்களுக்கு மதியம் 2.30 மணியளவில் தமிழில் வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்கு வங்க மாநிலத்திலும் இதேபோன்ற சர்ச்சை நீட் தேர்வின்போது ஏற்பட்டது. பெரும்பாலான மாணவர்களுக்கு வங்க மொழியில் அல்லாமல், இந்தியில் கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டன. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “தேர்வு நடத்துவதில் மத்திய, மாநில அரசுகள் கூட்டாக செயல்பட வேண்டியது அவசியம். இதில் சரியான ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே சிறப்பாக செயல்படுத்த முடியும். எதிர்காலத்தில் மாநில அரசின் பங்களிப்போடு சிபிஎஸ்இ தேர்வை நடத்த வேண்டும்.

இம்முறை மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் பல குளறுபடிகள் நடந்துள்ளன.

பல தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு வங்க மொழியில் கேள்வித்தாள் வழங்கப்படவில்லை. மாறாக ஆங்கிலம், இந்தி கேள்வித்தாள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வங்காள மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களை அதைக் கொண்டு தேர்வு எழுதக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சில இடங்களில் வங்காள மொழி கேள்வித்தாள்கள் குறைவாக இருந்ததால் அதன் பிரதி மட்டுமே மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. பிரதி வினாத்தாளைப் பயன்படுத்துவது என்பது குற்றமாகும். இதுபோன்ற செயல்களால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் குளறுபடிகளுக்குக் காரணமான அனைத்து அதிகாரிகளின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon