மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 15 டிச 2019

இரும்புத்திரை: தடை கேட்டு வழக்கு!

இரும்புத்திரை: தடை கேட்டு வழக்கு!

டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதால் நடிகர் விஷால் நடித்துள்ள இரும்புத்திரை படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

துப்பறிவாளன் படத்திற்கு பின் விஷால் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

“இந்த காலத்து திருடனுக்கு உன் வீட்டு சாவி தேவை இல்லை. உன்னை பத்தின சின்ன இன்ஃபர்மேஷனே போதும். ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது” என படத்தின் புரோமோ வீடியோவில் அர்ஜுன் குரலில் ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. தகவல் திருட்டை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது என்பதை ஏற்கனவே வெளியான டீசர், ட்ரெய்லர் ஆகியவற்றை பார்க்கும் போது உணரமுடிகிறது.

இந்நிலையில், ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் போது கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தபடுவதை போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக நாமக்கல் மாவட்டம் தத்தியாபுரத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “பொது மக்களின் நலனுக்காக 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட ஆதார் அடையாள அட்டை குறித்து இரும்புத்திரை படத்தில் தவறான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அந்த காட்சிகள் நீக்கப்படும் வரை படம் வெளியிட தடை விதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த காட்சிகளுடன் படம் வெளியானால், டிஜிட்டல் இந்தியா, மற்றும் ஆதார் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படும் எனவும் மத்திய அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட நேரிடும் எனவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரும்புத்திரை படம் மே 11ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon