மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

மணல் கடத்தல் : அதிகாரிகள் மீது குண்டர் சட்டம்!

மணல் கடத்தல் : அதிகாரிகள் மீது குண்டர் சட்டம்!

மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணல் கடத்தல் வழக்கில் பாபு என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கணவர் பாபு சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனைவி தேவியம்மாள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை மீண்டும் இன்று( மே 8) நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ராமதிலகம் அமர்வு முன்பு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் 2010 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மணல் கடத்தலுக்கு துணை போன அரசு அதிகாரிகள் மீது 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மணல் கடத்தல் விவகாரத்தில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் சட்டத்தை மீறாமலும் பொதுமக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாத வகையில் இருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் ஏன் ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகாரிகளுக்கு மணல் கடத்தல் வழக்கில் தொடர்பு இருந்தால் அவர்கள் மீது 4 வாரத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உள்துறை செயலாளர், மற்றும் டி.ஜி.பி ஆகியோர் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும், விசாரணை ஆணையத்திற்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் மணல் கடத்தல் வழக்கில் பாபு மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தையும் நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon