மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

நடிக்கிறது மத்திய அரசு!

நடிக்கிறது மத்திய அரசு!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை மே 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

காவிரி தொடர்பான வழக்குகள் கடந்த 3 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு, காவிரி விவகாரம் குறித்த செயல் திட்ட வரைவினை தாக்கல் செய்ய இரண்டு வார காலம் அவகாசம் கேட்டது. இதனை மறுத்த உச்ச நீதிமன்றம், வரும் 8 தேதிக்குள் காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

நேற்று (மே 7) கர்நாடக அரசு சார்பில், “ஒதுக்கப்பட்ட அளவினை விட கூடுதல் நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் திறக்க முடியாது” என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசும், “கர்நாடக அணைகளில் தற்போது 19 டிஎம்சி தண்ணீர் உள்ளது. 4 டிஎம்சி தண்ணீரை உடனே ஒதுக்க உத்தரவிட வேண்டும். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனே உத்தரவிட வேண்டும்”என்று மனு தாக்கல் செய்தது.

இதனிடையே, மத்திய அரசும் காவிரி பிரச்சனை குறித்து பிரமாணப் பத்திரம் ஒன்றை நேற்று தாக்கல் செய்தது.

இந்நிலையில், இன்று (மே 8) மத்திய அரசு வழக்கறிஞர் வேறொரு வழக்கில் ஆஜராக வேண்டிய காரணத்தால் ஒரு மணிநேரம் தாமதமாக காவிரி வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவிரி வரைவு செயல்திட்டம் தொடர்பாக, தற்போதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை 109 பக்க அறிக்கையாக நீதிபதிகளிடம் வழங்கிய மத்திய அரசு,கர்நாடகா தேர்தலால் காவிரி திட்ட விவகாரத்தில் முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளோம். வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டது. அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு தாக்கல் செய்வோம் என்று தெரிவித்தது. மேலும், வரைவு செயல் திட்டம் தாக்கல் செய்ய 10 நாள் அவகாசம் கோரியது மத்திய அரசு.

இதனையடுத்து, செயல் திட்டம் மற்றும் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான அமைப்பை இந்நேரம் உருவாக்கியிருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை மே14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும், வரைவு திட்டத்தை மே 14 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வரைவுத் திட்டம் பற்றி மத்திய நீர் வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தமிழக அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் சேகர் நாப்தே, “சட்டம்,ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி தீர்ப்பை அமல்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சொல்வதெல்லாம் ஒரு பதிலா, மத்திய அரசு நடிக்கிறது. மத்திய அரசை நம்பினால் எங்களுக்கு காவிரியில் ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து விட்டது” என்றார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon