மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

கர்நாடகத் தேர்தல்: கிராம மக்களின் கோரிக்கைகள்!

கர்நாடகத் தேர்தல்: கிராம மக்களின் கோரிக்கைகள்!

கர்நாடகாவில் வருகிற மே 12ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், மாநிலத்தின் தொலைதூர கிராமங்களிலிருந்து, தங்களுக்கு அடிப்படை வசதிகள் உட்பட எந்த வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை என்ற புகார் மீண்டும் ஒலிக்கிறது. தொலைதூர கிராம மக்களின் கோரிக்கைகளை இதுவரை எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டுகொண்டதேயில்லை. இந்த தேர்தலிலும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்; அடிப்படை வசதிகள் மற்றும் பெண்களுக்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் எனக் குரல் எழுப்புகின்றனர்.

சுதந்திரம்

பழமைவாத மனப்போக்கால் எங்கள் பெண் குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே திருமணம் செய்துவைத்துவிட்டோம். எனது பெரிய மகளுக்கு 13 வயதிலும், சின்ன மகளுக்கு 15 வயதிலும் திருமணம் நடந்தது. பெரிய மகளின் திருமண வாழ்க்கை ஏதோ நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் சின்ன மகள் திருமண வாழ்க்கையில் சீரழிந்துகொண்டிருக்கிறாள். ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும்போது அவளது கணவர் இவளை விட்டுச் சென்றுவிட்டார். இவளுக்கு நீதி வழங்க யாரும் முன்வரவில்லை.

அவளது தலையெழுத்தால் எங்களது வாழ்க்கையும் பாழாகிவிட்டது. கணவன் வீட்டில் பல கொடுமைகளை அனுபவித்திருக்கிறாள். ஊர் கூட்டத்தில் இதுகுறித்து அவளிடம் கேட்டபோது, கணவன் குடித்துவிட்டு வந்து தன்னை அடிப்பதாகக் கூறினாள். ஆனால் அவரது நண்பர் அவர் குடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கு இவள் இல்லை, அவர் குடித்துவிட்டுதான் வருவார் எனக் கூறினார்.

அப்போது, கூட்டத்தில் இருந்த மூத்த உறுப்பினர் ஒருவர், உனக்கு என்ன தைரியம் இருந்தால், ஒரு பெண்ணாக இருந்துகொண்டு குரலை உயர்த்திப் பேசுவாய் எனக் கேட்டுள்ளார்.

எங்களுக்கு போதுமான அத்தியாவசியத் தேவைகள் இல்லை. சாப்பிடுவதற்கு இல்லாமல் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளக் கூட யாரும் முன்வருவதில்லை. பலவீனங்களை கேலி செய்வார்கள். ஆனால் உண்மையான காரணத்தைக் கண்டறிய யாரும் ஆசைப்படுவதில்லை. ஒரு பெண் தன் காதலனுடன் சென்றுவிட்டால், பெண்ணைத்தான் தவறாகக் கூறுவார்களே தவிர ஆணை இல்லை. இந்தப் பகுதியில் 200 ஆண்கள் மத்தியில் நாங்கள் மட்டும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இங்குள்ள அரசு மருத்துவமனையில் கூட லஞ்சம்தான் பேசுகின்றது. ஆண் குழந்தை பிறந்தால் 300 ரூபாயும், பெண் குழந்தை பிறந்தால் 200 ரூபாயும் கொடுக்க வேண்டும் என மத்திய கர்நாடகப் பகுதியில் இருக்கும் அந்தப் பெண்ணின் தாயார் கூறினார்.

தண்ணீர்

சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். அங்கு வரும் குடிநீர் மண்டியாக இருக்கிறது. எட்டு நாள்களுக்கு ஒருமுறைதான் குழாய்களில் தண்ணீர் வரும். அதுவும், குழாயில் ஏதாவது பிரச்சினை என்றால் ஒரு மாதத்துக்கு தண்ணீர் வராது. சுத்தமில்லாத தண்ணீரைக் குடிப்பதால் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பணக்காரர்களுக்கு இந்த பாதிப்பு இல்லை. ஏனெனில், அவர்களிடம் பணம் இருக்கிறது, அதை வைத்து சுத்தமான தண்ணீரைப் பெற முடியும். ஆட்சிக்கு வருபவர்களும் ஒவ்வொரு முறையும் வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் ஆட்சியைப் பிடித்துவிட்ட பிறகு, வாக்குறுதியை மறந்துவிடுகின்றனர். அதனால் அரசாங்கம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்து மக்கள் நலனில் அக்கறை காட்டும் ஆட்சியாளர்களுக்கு அடுத்தடுத்து வாக்களிப்போம். அதுபோன்று, எங்கள் கிராமத்துக்கு மின்சார வசதியும், சாலை வசதியும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

கழிவறை

ஸ்வாச் பாரத் திட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டு கிராமப்புற துப்புரவுக்காக ரூ.15,343 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குல்பர்காவில் உள்ள கிராமத்தில் வீட்டில் கழிவறை என்பது சாத்தியமான ஒன்றா என மக்கள் கேள்வி கேட்கின்றனர். ஹவனூர் கிராமத்தில் உள்ள மக்கள் காலைக் கடனைக் கழிப்பதற்காக மிக நீண்ட தூரம் செல்ல வேண்டிதாய் இருக்கிறது. அரசாங்கம் கழிப்பறையைக் கட்டிய பிறகு பணம் தரப்படும் எனக் கூறுகிறது. அதாவது, ஒரு வீட்டுக்கு ரூ.15,000 ஒதுக்கீடு செய்யப்படும். சொந்த செலவில் கழிப்பறையைக் கட்டி, அதை போட்டோ எடுத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் கொடுக்க வேண்டும். இதையடுத்து, அந்த புகைப்படம் ஸ்வாச் பாரத் வலைதளத்தில் பதிவு செய்யப்படும். இந்த அனைத்து முறைகளுக்குப் பிறகு பணம் வழங்கப்படும். ஆனால் இந்த கிராமத்தில் வசிக்கும் அம்பிகா, எங்களிடம் சாப்பிடுவதற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லாத நேரத்தில், எப்படி கழிப்பறை கட்டுவதற்கு பணம் செலவழிக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் கிராம மக்கள் வைக்கும் இந்த கோரிக்கைகள் இந்தத் தேர்தலிலாவது நிறைவேற்றப்படுமா?

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon