மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

தனியார் உதவியை நாடும் ஜிஎஸ்டி!

தனியார் உதவியை நாடும் ஜிஎஸ்டி!

ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் கண்டறியப்பட்ட வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில் அதற்கான பணிகளை தனியாருக்கு விட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை என்ற வகையில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) கடந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த வரி விதிப்பு முறையிலும் வரி ஏய்ப்பு நடைபெறுவது அண்மையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து வரி ஏய்ப்பை முழுமையாகத் தடை செய்யும் வகையில் வரி செலுத்துவோர் விவரங்களை முழுமையாகக் கண்காணிக்கும் பொறுப்பைத் தனியாருக்கு விட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

வரி செலுத்துவோரின் சுய விவரங்களை 360 டிகிரி கண்காணிக்கும் பொறுப்புக்கு தனியார் நிறுவனங்களை நியமிக்கும் ஏலத்திற்கு ஜிஎஸ்டி நெட்வொர்க் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி ஜிஎஸ்டி நடைமுறையில் உள்ள தொடக்கம் முதல் இறுதி வரையிலான பணிகளை இந்நிறுவனம் கண்காணிக்கவுள்ளது. இந்தப் பணியில் ஈடுபடவுள்ள நிறுவனங்களே வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கான வழிகளையும், கண்காணிக்கும் வழிகளையும் வடிவமைத்துத் தர வேண்டும் எனவும் ஜிஎஸ்டி நெட்வொர்க் கூறியுள்ளது.

கடந்த வாரத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கை அரசு நிறுவனமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் 51 விழுக்காடு பங்கை தனியார் நிறுவனங்களும், 49 விழுக்காடு பங்கை அரசு நிறுவனங்களும் கொண்டுள்ளன. இந்நிலையில் வரி ஏய்ப்பைக் கண்காணிப்பதற்கான பொறுப்பையும் தனியார் நிறுவனங்களிடமே விடுவதற்கான முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon