மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

மாஸ்டரின் கின்னஸ் சாதனை!

மாஸ்டரின் கின்னஸ் சாதனை!

‘நாட்டாமை சூப்பர் சீன்ஸ்’ என யூடியூப்பில் தேடினால் விஜயகுமார் தீர்ப்பு வழங்கும் அந்த காட்சிதான் முதலாவதாக வரும். அந்த காட்சியில் சாட்சி சொல்லும் அனைவரும் உறவுக்காரர்கள் என விஜயகுமார் தட்டிக் கழிக்கும் போது ‘தாத்தா நான் பார்த்தேன்’ என ஒரு மூன்று வயது சிறுவனாய் மாஸ்டர் மகேந்திரன் முன் தோன்றுவார். மூன்று வயது சிறுவனின் அந்த மழலைப் பேச்சை கேட்க அடிக்கடி அந்த காட்சிகள் பார்க்கப்படுவது உண்டு.

நாட்டாமையில் மூன்று வயது சிறுவனாய் திரையில் தோன்றி தமிழ் சினிமாவுக்கு கிடைத்திட்ட புதிய குழந்தை நட்சத்திரமாய் கொண்டாடப்பட்ட மாஸ்டர் மகேந்திரன், சினிமாவுலகில் 25ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். சரத்குமார், விஜய், அர்ஜூன், ரஜினி, அஜித் உள்ளிட்ட தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாய் ஜொலித்தவர் மகேந்திரன்.

இயக்குநர் பாண்டியராஜனின் பெரும்பாலான படங்களில் இவர் எப்படியும் இடம்பெற்றிருப்பார். விஜய்யின் மின்சாரக் கண்ணாவில் கோர்ட் சூட்டில் பணக்கார வீட்டுப் பையனாகவும், அழுக்கு ஆடையுடன் வேலைக்காரப் பையனாகவும் இரண்டு விதமான கேரக்டரில் கலக்கியிருப்பார்.

சினிமா மட்டுமல்லாது சின்னத் திரையிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் மகேந்திரன். சின்னத் திரையில் ‘துப்பறியும் கண்கள்’ என்ற தொடரில் இறந்தவரின் கண்கள் பொருத்தப்பட்ட மகேந்திரனுக்கு கனவுகளில் கொலைச் சம்பவங்கள் துரத்துகின்றன. அந்தச் சம்பவங்களை நினைவில் கொண்டுவந்து கொலைகளை மகேந்திரன் விவரிக்கும் அந்த தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. மகேந்திரன் வெளிப்படுத்தும் முகபாவனைகளை பார்ப்பதற்காகவே ரசிகர் பட்டாளம் உருவாகும் அளவுக்கு தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

வெள்ளித் திரை, சின்னத் திரை ரசிகர்களைக் கவர்ந்த மகேந்திரன் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து அங்கும் தன்னை சிறந்த குழந்தை நட்சத்திரமாக நிரூபித்திருக்கிறார்.

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில விருதை இரண்டு முறையும், நந்தி விருதை இரண்டு முறையும் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாது குழந்தை நட்சத்திரமாக 100 படங்களுக்கு மேல் நடித்த சாதனையாளர் என்கிற பெருமையை உலகளவிலும், இந்திய அளவிலும், மாநில அளவிலும் படைத்துள்ளார்.

நாட்டாமை முதல் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு வரை 167 படங்கள் நடித்திருக்கும் மகேந்திரன், குழந்தை நட்சத்திரமாகத் தன்னை நிரூபித்து விட்டார். ஆனால் நடிகராகத் தன்னை நிலைநிறுத்த சரியான படங்கள் அமையவில்லை. தற்போது நடித்து வரும் நாடோடிக் கனவு, நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு படங்களின் மூலம் தன்னை நடிகராக நிலைநிறுத்த முயற்சியினை மேற்கொண்டு வருகிறார் மகேந்திரன்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon