மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

தகவல் திருட்டு சர்ச்சை: பாதிப்பில்லா பேஸ்புக்!

தகவல் திருட்டு சர்ச்சை: பாதிப்பில்லா பேஸ்புக்!

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பேஸ்புக் நிறுவனத்துக்கு பல்வேறு சிக்கல்கள் வந்த வண்ணம் இருந்தன. கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா என்னும் நிறுவனத்திற்கு 50 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 335 கோடி) பயனர்களின் தகவல்களை, அவர்களின் அனுமதியின்றி வழங்கியதாக பேஸ்புக் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, அந்த நிறுவனத்தின் பங்கும் சரிவைச் சந்தித்தது. மேலும் இந்தப் பிரச்சினை தொடர்பாகச் சமூக வலைத்தளங்களின் ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் மீதும் அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மீதும் பல்வேறு கேள்விகள் எழுந்தன.

முன்னதாக ரியூடர்ஸ் இப்சோஸ் என்னும் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில், "அமெரிக்காவில் 50 சதவிகிதத்துக்கும் மேலான பேஸ்புக் பயனர்கள், பாதுகாப்பு குறைபாடு இருந்த போதும் அவர்கள் பேஸ்புக்கில் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொள்ளவில்லை. அதில் நான்கில் ஒரு பகுதியினர் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஒருசிலர் மட்டுமே பேஸ்புக் உபயோகிப்பதை நிறுத்திவிட்டோம் அல்லது அதனை டெலிட் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதில் 64 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் குறைந்தபட்சம் தினமும் ஒருமுறையாவது பேஸ்புக் உபயோகிப்பதாகத் தெரிவித்துள்ளனர்" என பல சுவாரசியத் தகவல்கள் கருத்துக்கணிப்பின் முடிவில் தெரியவந்தன.

இந்த (64 சதவிகிதம்) எண்ணிக்கையானது மார்ச் மாதம் கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா விவகாரத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் எண்ணிக்கையை (68 சதவிகிதம்) விடக் குறைவாகவே உள்ளது.

மார்ச் மாதம் 16ஆம் தேதி பேஸ்புக் நிறுவனத்தின் கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து, சமூகவலைத்தள சந்தையில் பெரும் பிரச்சினையாக வெடித்தது.

இதனையடுத்து அமெரிக்காவைச் சுற்றிலும் 2194 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவில் இந்த விவகாரத்திற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்நாப் சாட் பயனர்களைக் காட்டிலும் பேஸ்புக் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை மிகவும் எச்சரிக்கையாக வைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 74 சதவிகிதம் பேஸ்புக் பயனர்கள் பாதுகாப்பு குறித்த தகவல்களை அறிந்திருந்தனர். அதில் 78 சதவிகிதம் பேர் அதில் மாற்றம் செய்யவும் அறிந்திருந்தனர். இந்த எண்ணிக்கை இன்ஸ்டாகிராமுடன் ஒப்பிடுகையில் (முறையே 60 மற்றும் 65 சதவிகிதம்) அதிகமாகும்.

இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா விவகாரம் பேஸ்புக் நிறுவனத்திற்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon