மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

வாக்கு எந்திரத்தைக் குறை கூறவுள்ள காங்கிரஸ்: மோடி

வாக்கு எந்திரத்தைக் குறை கூறவுள்ள காங்கிரஸ்: மோடி

மக்களிடம் சென்று பிரசாரம் செய்வதற்குப் பதிலாக, தங்களது தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் சொல்லலாம் என்று இப்போதே காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் யோசித்து வருவதாகக் கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. குறிப்பாக, தேர்தல் தோல்விக்குப் பின் வாக்கு எந்திரத்தைக் காங்கிரஸ் கட்சி குறை கூறுவது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் முதல், கர்நாடகாவில் தொடர்ச்சியாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. விஜயபுராவில் இன்று (மே 8) மதியம் நடைபெற்ற பாஜக பேரணியை, அவர் தொடங்கி வைத்தார். கோடையின் தாக்கத்தினால் வியர்வையில் நனைந்தபடியே பெருமளவில் மக்கள் இந்த பேரணிக்கு வந்திருப்பதாகவும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர்கள் பாஜகவை ஆதரிக்கத் தயாராகவிருப்பதாகவும் பேசினார்.

”மக்களைச் சந்திப்பதற்குப் பதிலாக, தங்களது தோல்விக்கு என்ன காரணம் கூறலாம் என்று இப்போதே யோசித்து வருகின்றனர் காங்கிரஸ் கட்சித்தலைவர்கள். பகவான் பசவேஸ்வரரோடு நெருக்கமான மண்ணில், நான் நின்று கொண்டிருக்கிறேன். அவருடைய தத்துவங்கள் எல்லா சமூகத்தினரையும் ஒன்றிணைப்பதாக உள்ளன. சோகம் என்னவெனில், அவருடைய தத்துவங்களைப் பின்பற்றாமல், வாக்குகளைப் பெறுவதிலேயே கவனமாக உள்ளது காங்கிரஸ்” என்று தெரிவித்தார் மோடி. இந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைவது உறுதி என்றும் கூறினார்.

“கர்நாடகாவில் தோல்வியடைந்தபிறகு, வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி நடந்ததாக, காங்கிரஸ் கட்சி சொல்வது உறுதி. அவர்களிடம் (காங்கிரஸ்), இந்த மாநில விவசாயிகளுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்க விரும்புகிறேன். மக்கள் தாகத்தில் தவித்தபோது, அமைச்சர்கள் டெல்லியில் அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். இந்த ஆட்சியில் அங்கம் வகித்த எந்த அமைச்சராவது ஊழல் குற்றச்சாட்டில் சிக்காமல் இருக்கிறார்களா?” என்று மக்களை நோக்கிக் கேள்வியெழுப்பினார் மோடி. மேலும், கர்நாடகாவிலுள்ள துறவிகள் மற்றும் மடங்களின் முயற்சிகளால் மட்டுமே, அம்மாநில மக்கள் ஒற்றுமையுடனும் முன்னேற்றத்துடனும் வாழ்வதாகத் தெரிவித்தார். ஏழைகளுக்கான சமூகப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் முத்தலாக் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண காங்கிரஸ் கட்சி முன்வரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, கொப்பல் என்ற இடத்தில் நடந்த பாஜக கூட்டத்திலும் பிரசாரம் மேற்கொண்டார் மோடி. தேசபக்தியில் பாஜக நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியோ ஒரு குடும்பத்தை மட்டுமே சார்ந்திருப்பதாகவும் அவர் கூறினார். கர்நாடகாவில் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி எந்தவிதத்திலும் செயலாற்றவில்லை என்று தெரிவித்தார்.

சோனியா காந்தி பிஜாபூரில் இன்று பிரசாரம் செய்யவுள்ளது குறித்துப் பேசிய மோடி, இதன் மூலமாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டை திரும்பப் பெறுவார்கள் என அதன் தலைவர்களே கூறிவருவதாகத் தெரிவித்தார். ”நேற்று ஒரு தொலைக்காட்சியில் காங்கிரஸ் தலைவர் ஒருவரது பேட்டியைக் கண்டேன். அக்கட்சியின் தலைவரால் பயன் ஏதும் இல்லையென்றும், அவரது தாயார் பிரசாரத்துக்கு வந்தால் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் பெறுவார்கள் என்றும் அந்த தலைவர் கூறினார். இவ்வாறுதான் காங்கிரஸ் தலைவர்கள் தற்போது பேசிவருகின்றனர்” என்று குறிப்பிட்டார் மோடி.

விஜயபுரா மற்றும் கொப்பலில் பிரசாரத்தை முடித்தவிட்டு, இன்று மாலை பெங்களூருவில் நடைபெறவுள்ள பாஜக பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon