மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

பிரிவினையை முதலில் முன்மொழிந்தது யார்?

பிரிவினையை முதலில் முன்மொழிந்தது யார்?

“இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை முதலில் முன்மொழிந்தது இந்து மகா சபையின் தலைவர் வி.டி.சவார்கர் தான்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பாகிஸ்தானில் பேசியுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சனம் செய்ததால், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது காங்கிரஸ் கட்சி.

இந்நிலையில், இன்று (மே 8) பாகிஸ்தான் லாகூர் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்டு பேசிய மணிசங்கர் அய்யர், “இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை முதலில் முன்மொழிந்தது அகில இந்திய இந்து மகாசபையின் தலைவர் சவார்க்கர் தான்” என்று கூறியுள்ளார்.

மணிசங்கர் அய்யர் தனது உரையில், 1923 ஆம் ஆண்டு சவார்க்கர் தான் எந்த மத நூலிலும் இல்லாத 'இந்துத்துவா' எனும் வார்த்தையை தனது நூலில் அறிமுகப்படுத்தியதாக குறிப்பிட்டார். எனவே, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை முதலில் முன்மொழிந்தவர் சவார்க்கர் தான் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய மணிசங்கர் அய்யர், “எழுபது சதவீதமான இந்திய மக்கள் மோடிக்கு வாக்களிக்கவில்லை, ஆனால் அவர்களது வாக்குகள் சிதறிப் போய்விட்டது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், முகமது அலி ஜின்னாவை ‘குவாத் ஈ ஆஸாம்’ என்ற அடைமொழியுடனே குறிப்பிட்ட மணிசங்கர் அய்யர், “இதற்கு பெரும்பாலான தொலைக்காட்சி நெறியாளர்கள் இந்தியாவை சேர்ந்த ஒருவர், ஜின்னாவை எப்படி அந்த அடைமொழியால் குறிப்பிடலாம் கேள்வி கேட்பார்கள், பாகிஸ்தானை சார்ந்தவர்கள் காந்தியை மகாத்மா காந்தி என அழைக்கும் போது அவர்களுக்கு இந்த நாட்டின் மீது பற்று இல்லை என கூற முடியுமா?” எனவும் அவர் கேட்டுள்ளார்.

மணிசங்கர் அய்யர் கூறியது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அவர் பேசுவதைப் பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை” என்றார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon