மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

நம்பிக்கை கேள்விக்குறியாகிறது!

நம்பிக்கை கேள்விக்குறியாகிறது!

வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்குத் தொடர்ந்து அவகாசம் வழங்கி வருவது உச்ச நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்குவதாக பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காவிரி தொடர்பான வழக்குகள் இன்று (மே 8) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது காவிரி தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்புதான் என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் வழக்கின் விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் மத்திய அரசு கண்டிப்பாக வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் தொடர்ந்து அவகாசம் கேட்டு வரும் மத்திய அரசுக்குத் தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின், திமுக செயல்தலைவர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் இறுதித் தீர்ப்பை செயல்படுத்தாத பா.ஜ.க அரசுக்கு, வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் மேற்கொண்டு கால அவகாசம் வழங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதோடு, சர்வ வல்லமை படைத்த உச்சநீதிமன்றம் மீதுள்ள மக்களின் நம்பிக்கை தளர்ந்து போகிறது.

காவிரி பிரச்னையில் தமிழக மக்களும், விவசாயிகளும் திசைதெரியாத நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கும் சூழலில், 4 டி.எம்.சி தண்ணீர் உடனே திறந்து விட வேண்டுமென்கிற உச்சநீதிமன்ற வாய்மொழி தீர்ப்பும் பொய்த்துப் போய், மாதந்தோறும் கிடைக்க வேண்டிய தண்ணீரும் தமிழகத்திற்குக் கிடைக்காதது வேதனையளிக்கிறது.

கே.பாலகிருஷ்ணன், சிபிஎம் மாநிலச் செயலாளர்

கர்நாடக தேர்தலுக்காக தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு விரோதமானது என்பதோடு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து புறக்கணிப்பது அரசியல் சாசனத்திற்கே விரோதமானது. மேலும் கர்நாடகத்தில் தேர்தலைச் சந்திப்பதால் மத்திய அரசே இல்லாமல் போய்விட்டதா? என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசின் இத்தகைய போக்கிற்கு உச்சநீதிமன்றமும், தொடர்ந்து அனுமதி வழங்குவது நீதித்துறையின் மீது மக்களது நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்குவதாகவே உள்ளது. மத்திய அரசு மே மாதம் 14ந் தேதியும் உருப்படியான அதிகாரங்களை கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்திற்கான வரைவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது என்பதே அனுபவமாக உள்ளது.

எனவே இத்தகைய அநீதியை எதிர்த்து உறுதியான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென தமிழக மக்களையும், அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாய அமைப்புகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

தினகரன், அமமுக துணைப் பொதுச்செயலாளர்

மனசாட்சியற்ற, மனிதநேயமற்ற செயலை மத்திய அரசு செய்துவிட்டது. தன் அரசியல் ஆதாயத்திற்கான ஆடுகளமாக காவிரியை பாஜக அரசு பயன்படுத்துகிறது. 24மணி நேரத்தில் மத்திய அரசால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும். ஆனால் இயன்ற அளவுக்கு இழுத்தடிக்கும் வேலையை செய்து வருகிறது.

தமிழக மக்களின் நியாயத்தை தன் சுயநலத்துக்காக மத்திய அரசு சிதைத்துவிட்டது. எதிர்பார்க்கப்பட்ட நாடகத்தைத்தான் நடத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்துக்காக காத்திருந்த தமிழகம், தற்போது வரைவு திட்டத்திற்காக காத்திருக்க வேண்டிய அவலத்தை ஏற்படுத்திய மத்திய அரசுக்கும், அதன் கூட்டாளியாக செயல்படும் பழனிசாமி அரசுக்கும் தமிழகம் தக்கப் பாடம் புகட்டும்.

பாமக இளைஞரணித் தலைவர், அன்புமணி ராமதாஸ்

காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வரைவுச் செயல் திட்டத்தை தாக்கல் செய்வதற்கான உச்சநீதிமன்றத்தின் மூன்றாவது காலக்கெடுவையும் மத்திய அரசு மதிக்கத் தவறியிருக்கிறது. வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்டு, அதில் 6 நாட்கள் அவகாசத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம் காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு மத்திய அரசு மீண்டும் துரோகம் இழைத்துள்ளது.

இந்தியாவின் சொந்த மாநிலத்திற்கு எதிராகவே மத்திய அரசு துரோகம் செய்வது நியாயமல்ல. இந்த துரோகத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு பரிகாரம் காண வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால், பக்ரா & பியாஸ் வாரியத்திற்கு இணையான அதிகாரங்களைக் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான வரைவுத் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் மே 14-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார்

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு அமையும் என்று 100 சதவீதம் நம்பிக்கை இருக்கின்றது. மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருப்பதால் காவிரி உட்பட தமிழக உரிமைகளை விட்டுக் கொடுப்பதாக அர்த்தமில்லை. காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நம்பவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon