மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

நானே பிரதமர்!

நானே பிரதமர்!

"வருகிற 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் நான் பிரதமராவேன்" என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் வருகிற மே 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தலும், மே 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கர்நாடகாவில் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்துவருகிறார். பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துவருகின்றனர். அவர்களுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியினரும் முழுவீச்சில் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று (மே 8) காலை பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில், “வருகின்ற 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் நான் பிரதமராவேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும், “ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எடியூரப்பாவை கர்நாடக முதல்வர் வேட்பாளராக அறிவித்தது ஏன்?” என்று பாஜகவுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறாது என்றும், பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியிலேயே தோல்வி அடைவார் என்றும், கடந்த மாதம் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ராகுல் காந்தி. ஆனால், செப்டம்பர் மாதம் அவர் காங்கிரஸ் துணைத் தலைவராகப் பதவி வகித்தபோதே, “2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்லில் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கத் தயார்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon