மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 மே 2018

ஜாக்டோ ஜியோ போராட்டம்: ஆசிரியர் மரணம்!

ஜாக்டோ ஜியோ போராட்டம்: ஆசிரியர் மரணம்!

சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற பாபநாசம் அரசுப் பள்ளி ஆசிரியர் உயிரிழந்தது போராட்டக்காரர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று (மே 8) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை போலீசார் நேற்று முதலே கைது செய்துவருகின்றனர். தலைமைச் செயலகத்தை சுற்றியும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் சுமார் 8 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போர்க்களமான சென்னை

காலை 5 மணி முதல் கோயம்பேடு வரும் வாகனங்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கைது செய்துள்ளனர்.

இது தவிர தலைமைச் செயலகம் செல்லும் வழியில் தடுப்புகளை வைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாகச் செல்லும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று காலை 9.30 மணி அளவில் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவதற்காகப் பலத்த போலீஸ் கெடுபிடியையும் மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் சேப்பாக்கத்தில் திரண்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னை பல்கலைக்கழகம் அருகில் திரண்டவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனைக் கண்டித்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வாலாஜா சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வேனில் ஏற்றிக் கைது செய்தனர்.

இருப்பினும் தனித் தனியாகத் தலைமைச் செயலகத்தை நோக்கி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்றவண்ணம் உள்ளனர். அவர்களைக் கைதுசெய்து சிந்தாதிரி பேட்டையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர். அப்பகுதியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற தள்ளுமுள்ளில் பெண் ஊழியர்கள் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியர் மரணம்

சென்னை அண்ணா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் கைது செய்த போலீசார் அவர்களை எழும்பூர் அரசு பள்ளி ஒன்றில் தங்க வைத்துள்ளனர். அங்குத் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆசிரியர் தியாகராஜன் உயிரிழந்தார். பார்வையற்ற மாற்றுத் திறனாளியான தியாகராஜன் தஞ்சை பாபநாசம் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவார்.

தமிழகம் முழுவதும் கைது நடவடிக்கை

சென்னையில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்துவருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ஜாக்டோஜியோ நிர்வாகிகள் 38 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கருணாநிதி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். அதுபோன்று மதுரையிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபோன்று தஞ்சை, வேலூர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

இதற்கிடையே தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் இன்று பிற்பகலில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

இன்று மாலை ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூடி வேலைநிறுத்தம் செய்வது குறித்து முடிவெடுப்போம் என அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

செவ்வாய் 8 மே 2018