முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது தொழில் மேம்பாட்டுக்காக ரூ.1 லட்சம் கோடி வரையில் கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், தொலைத் தொடர்புச் சேவையில் ரூ.60,000 கோடியை முதலீடு செய்வதாகவும் அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி 2016ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் தனது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தைத் தொடங்கினார். துவக்கத்தில் இலவசச் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்ட ஜியோ பின்னர் குறைந்த கட்டணத்திலான சலுகைகளை அறிவித்து வருவாய் ஈட்டத் தொடங்கியது. மொபைல் தயாரிப்பு மற்றும் பிராட்பேண்ட் சேவையிலும் ஜியோ ஈடுபட்டது. சந்தையில் தனது நிலையை உயர்த்திக்கொள்ள அதிக முதலீடுகளுடன் தொழில் விரிவாக்கத்தில் ஜியோ தற்போது ஈடுபட்டுள்ளது.
பெயரை வெளியிட விரும்பாத ஜியோ நிறுவன அதிகாரி ஒருவர் லைவ் மிண்ட் ஊடகத்திடம் பேசுகையில், “ஜியோவின் தொழில் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. பொதுவாக எங்களது முதலீடுகள் குறித்த விவரங்களை வெளியிடுவதில்லை. இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் சேவை நிறுவனமாக ஜியோ இருப்பதோடு, பிராட்பேண்ட் சேவையிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. நாடு முழுவதும் ஜியோவின் சேவையை விரிவுபடுத்த முதலீட்டு அளவு ரூ.1.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது. டிசம்பர் மாதத்துக்குள் நாட்டு மக்களில் 99 சதவிகிதத்தினரிடையே தங்களது சேவையை எடுத்துச் செல்ல ஜியோ திட்டமிட்டுள்ளது. அதிக முதலீடுகள் வாயிலாக இதர நெட்வொர்க் நிறுவனங்கள் வழங்கும் கட்டணப் போட்டியை ஜியோவால் சமாளிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.