மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 15 டிச 2019

நீட் எதிர்ப்பு: மதிமுக தொண்டர் தற்கொலை முயற்சி!

நீட் எதிர்ப்பு: மதிமுக தொண்டர் தற்கொலை முயற்சி!

நீட் தேர்வைக் கண்டித்துப் புதுக்கோட்டையைச் சேர்ந்த மதிமுக தொண்டர் ஜகுபர் அலி தூக்கிலிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார்.

நாடு முழுவதும் கடந்த 6ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு சென்றிருந்த மாணவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். எர்ணாகுளத்துக்கு மகனைத் தேர்வெழுத அழைத்துச் சென்ற திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மாரடைப்பால் உயிரிழந்தார். மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கே இவரின் மரணத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ள தலைவர்கள், இதற்கு இரு அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் மதுரைக்கு மகளைத் தேர்வுக்கு அழைத்துச் சென்ற கண்ணனும் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த நிலையில் நீட் தேர்வைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் முள்ளியான்வயல் கிராமத்தைச் சேர்ந்த மதிமுக தொண்டர் ஜகுபர் அலி நேற்று (மே 7) தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அவரது குடும்பத்தினர் கயிற்றை அறுத்து, அவரைக் கொண்டுபோய் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்தத் தகவல் அறிந்ததும் தஞ்சையில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விழிப்புணர்வு பயணத்தில் ஈடுபட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உடனே புதுக்கோட்டைக்கு விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜகுபர் அலியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ, "ஜகுபர் அலி மதிமுகவில் தொடக்கக் காலத்திலிருந்து பணியாற்றும் உறுதியான தொண்டர் ஆவார். கழகத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டுள்ளார். தூக்கு மாட்டிக் கொள்வதற்கு முன்பு அவர் நீட் தேர்வுக்கு எதிராகத் தனது மனக் குமுறலை - உள்ளக் கொதிப்பையும் எதிரே வைத்திருந்த அலைபேசியில் பதிவு செய்துள்ளார் " என்று குறிப்பிட்டுள்ளார்.

"நேற்று கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இறந்து போன கிருஷ்ணசாமி பிரச்சினையில், நான் ஆளுநர் சதாசிவம் அவர்களிடம் பேசியதையும் குறிப்பிட்டுள்ளார். எனது போராட்டங்களைக் குறிப்பிட்டு, 24 ஆண்டுகள் போராடியும் தமிழகத்துக்கு விமோசனம் இல்லையே என்று வருந்தியவாறு, “நான் சாகப் போகிறேன்,” என்று கூறித் தூக்கு மாட்டித் தொங்கியுள்ளார். அடிக்கடி என்னிடம் அலைபேசியில் பேசுவார்; தமிழ்நாட்டு நிலைமைகளைக் கூறி வேதனையைக் கொட்டுவார்; நான் அவருக்கு ஆறுதல் கூறுவது வழக்கம்" என்று வேதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், "அந்த ஏழ்மையான குடும்பத்தில் அவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். அவர் உயிர் பிழைக்க வேண்டுமே என்ற ஏக்கத்தோடு தமிழகத்திலுள்ள இளைஞர்களை - குறிப்பாக கழகக் கண்மணிகளை “உயிரைப் போக்கிக் கொள்ள முயலாதீர்கள்; உங்கள் குடும்பத்தினரைத் துயரப் படுகுழியில் தள்ளாதீர்கள்” என்று உடைந்துபோன உள்ளத்தோடு இருகரம் கூப்பி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்" என்று மதிமுகவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தொண்டர் சிவகாசி ரவியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வைகோ மருமகன் சரவண சுரேஷும் தீக்குளித்து உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon