மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

காஷ்மீர் கல்வீச்சு : இளைஞரின் உடல் சென்னை வருகை!

காஷ்மீர் கல்வீச்சு : இளைஞரின் உடல் சென்னை வருகை!

காஷ்மீர் கல்வீச்சில் உயிரிழந்த சென்னை இளைஞரின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் நர்பால் அருகே பாதுகாப்பு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று (மே 7) கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலால் காஷ்மீருக்கு சுற்றுலாச் சென்ற சென்னையைச் சேர்ந்த ராஜவேல் என்பவரின் மகன் திருமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

முகம் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் அருகில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுற்றுலா சென்ற இளைஞர் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து, காஷ்மீர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, திருமணியின் தந்தையைச் சந்தித்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி ஆறுதல் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தால் நான் வெட்கித் தலைகுனிகிறேன். இது மிகவும் கவலை தரக் கூடியது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, “காஷ்மீருக்குச் சுற்றுலா வந்த இளைஞருக்கு இது போன்ற ஒரு சம்பவம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், தாக்குதல் நடத்திய குண்டர்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காஷ்மீர் மாநிலத்தை ஆள்வதில் முதல்வர் மெஹபூபா முஃப்தி தோல்வி அடைந்துவிட்டார். எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த திருமணியின் உடல் ஸ்ரீ நகரில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் விமானம் மூலம் கொண்டுவரப்படும். பின்னர், அங்கிருந்து சென்னை வரும் விமானத்தில் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இன்று மாலை 4 மணியளவில் அவரது உடல் சென்னை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon