மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

தினப்பெட்டகம்

தினப்பெட்டகம்

உயிருக்கு ஆதாரமான ஆக்ஸிஜன் குறித்த தகவல்கள்

நம் உடலுக்கு, நம் இருத்தலுக்கு, ஏன் இந்த உலகம் நிலைப்பதற்கு அதி அத்தியாவசியமான ஒரு விஷயம் என்றால் எதைச் சொல்வீர்கள்? ஆக்ஸிஜன் என்று யாராவது சொன்னால், அவர்தான் வின்னர். ஆம், ஆக்ஸிஜன்தான் அனைத்துக்கும் அடிப்படை. ஆக்ஸிஜன் இல்லாமல் இதை நான் எழுதவும் முடியாது, நீங்கள் வாசிக்கவும் முடியாது. நம் அடிப்படையான தேவைகளுள் அதி முக்கியத்துவம் வாய்ந்தது ஆக்ஸிஜன். அந்த ஆக்ஸிஜன் பற்றி நமக்கு என்ன தெரியும்?

பூமியில் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு photosynthetic உயிரிகளின் தோற்றத்துக்கு முன்பு ஆக்ஸிஜன் இல்லாமல் இருந்தது.

ஆக்ஸிஜன் இல்லாமல் இன்று இப்படியான வளம்மிக்க பூமி இல்லை, நாம் இல்லை. மற்ற கோளங்களில் இருந்து நம்மைத் தனித்துக் காட்டுவது ஆக்ஸிஜன். இந்த ஆக்ஸிஜன் தோற்றத்தின்போது, Anaerobic organisms, அதாவது ஆக்ஸிஜன் இல்லாமல் வாழக்கூடிய உயிரிகள் அழிந்து போகத் தொடங்கியது. ஏறத்தாழ அனைத்து உயிரிகளுமே மடிந்துபோன பிறகுதான் ஆக்ஸிஜன் தன் சம்ராஜ்ஜியத்தை நிலைநாட்டியது.

இயற்கையில் கிடைக்கும் ஆக்ஸிஜன் எங்கிருந்து வருகிறது? மரங்கள். ஆனால், நமக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜனில் ஏறத்தாழ 70% பச்சைப்பாசி மற்றும் cyanbacteria ஆகிய உயிரிகள் தருவது.

லியோனார்டோ டா வின்சி முதன்முதலில் காற்று என்பது இரண்டு வாயுக்களால் ஆனது. ஒன்று சுவாசிப்பதற்கும், மற்றொன்று நெருப்பு எரிவதற்கும் பயன்படுகிறது என்று கூறினார்.

ஆக்ஸிஜன் என்கிற தனிமம் Carl Scheele, Joseph Priestley மற்றும் Antoine Lavoisier ஆகிய மூவராலும், தனித்தனியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. Scheele முதன்முதலில் அதைக் கண்டுபிடித்தார்; Priestley தனது கண்டுபிடிப்பை முதலில் வெளியிட்டார்; Lavoisier அதைக் காற்றில் இருந்து பிரித்து, அதன் தன்மையை ஆராய்ந்தார்.

ஆக்ஸிஜன் வாயு நிறமற்றது, மணமற்றது, சுவையற்றது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால், திரவம் மற்றும் திட வடிவத்திலான ஆக்ஸிஜன் வெளிர்நீல நிலத்தில் இருக்கும். மேலும், அது காந்த சக்தி உடையதும்கூட.

சமீபத்திய ஆய்வுகளில் நட்சத்திரங்களின் மத்தியில் ஆக்ஸிஜன் உருவாகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். கார்பன்-12 மற்றும் ஹீலியம்-4 அணுக்கருக்கள் இணைகையில் ஆக்ஸிஜன் தோன்றுகிறது.

அமேசான் காடுகளில் வெளியாகும் ஆக்ஸிஜன் முழுமையாக அக்காடுகளால் உள்ளிழுத்துக் கொள்ளப்படுகிறது. அங்கிருந்து வெளிச் சூழலுக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் பூமி, நீர் நிலைகளில் இருக்கும் பாசியிலிருந்து கிடைக்கிறதாம்.

ஒரு சாதாரண மனிதன் நாளொன்றுக்கு ஏறத்தாழ 0.7 கிலோ உணவு உண்கிறார்; 1.85 கிலோ நீர் அருந்துகிறார். ஆனால், ஒரு நாளைக்கு 16 கிலோ ஆக்ஸிஜனை உபயோகிக்கிறார். நம் ஒரு நாளில் இவ்வளவு ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறோமே, அதற்கேற்றாற்போலச் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கிறோமா?

ஆக்ஸிஜன் என்ற தனிமத்தின் தமிழ்ப் பெயர் ‘உயிரியம்’!

ஆசிஃபா

திங்கள், 7 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon