மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 21 ஜன 2021

ரஜினியின் ஆன்மிக பலத்துடன் மோதிய பணம்!

ரஜினியின்  ஆன்மிக பலத்துடன் மோதிய பணம்!வெற்றிநடை போடும் தமிழகம்

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 66

இராமானுஜம்

அரசியல், சினிமா, தொழில் ஆகியவற்றில் வெற்றி பெறுவதைக் காட்டிலும் அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்குக் கடுமையான போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரம், வசூல் இரண்டிலும் தமிழ் சினிமாவில் முதல் இடத்தை இன்று வரை தக்கவைத்திருக்கும் ரஜினிகாந்த், அதற்கான இழப்புகளையும், எதிர்ப்புகளையும் கடந்த 15 வருடங்களாகச் சந்தித்துவருகிறார்.

தனக்கு எதிராக வைக்கப்படும் கருத்து மற்றும் கடுமையான விமர்சனங்களுக்கு பதில் கூறுவதைத் தவிர்த்துவிடுவார் ரஜினிகாந்த். தொழில் முறை எதிரிகளைக் காட்டிலும் தனது வீட்டார் தன்னை வைத்து பணம் சம்பாதிக்க எடுக்கும் முயற்சிகளை முறியடிக்க மிகவும் சிரமப்பட்டார். முதல் முறையாக பாபா படத்தில் அதனை எதிர்கொண்டார்.

அரசியல், அரசு அதிகாரத் தலைமை, சினிமா முதலிடம் இவற்றில் இருப்பவர்கள் குடும்பத்தினர் தலையீடு இல்லாதவாறு கட்டுப்படுத்திவந்தால் அவர்களது புகழுக்கும் நேர்மைக்கும் களங்கம் வராது. ஆனால், அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அதையும் கடந்து ‘உறவு’ என்கிற துருப்புச் சீட்டைப் பயன்படுத்த முயற்சிப்பார்கள். அப்படியொரு இக்கட்டான நிலைமை லதா ரஜினிகாந்த் மூலம் பாபா படத்தில் ரஜினிக்கு ஏற்பட்டது.

படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, லதா ரஜினிகாந்த் சொல்லும் அனைத்தையும் செய்தார். அது தவறு என்றாலும் ரஜினியிடம் கூறவில்லை. திரைப்படத் தயாரிப்பு, வியாபாரம் என்பதைக் கடந்து பாபா படம் மூலம் வருமானம் பார்க்க முயற்சித்தார் லதா ரஜினிகாந்த். இமயமலைக்கு அப்பால் சாகாவரம் பெற்ற பாபா இருக்கிறார் என்பதை பாபா படத்தின் மூலம் மக்களிடம் கொண்டு செல்லவும், தான் விரும்பும் அரசியலைக் கூறவும் முயற்சித்தார் ரஜினி. அதற்காக படம் தொடங்குவதற்கு முன் பாபா முத்திரையை அறிமுகப்படுத்தினார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும், ஆரவாரத்தையும் ஏற்படுத்தியது.

இதனை வியாபாரமாக்க விரும்பிய லதா ரஜினிகாந்த், ‘பாபா படம் சம்பந்தமான புகைப்படங்கள் மட்டுமல்லாது அதற்கு முன் ரஜினிகாந்த் நடித்துள்ள படங்களின் புகைப்படங்களையும், அவர் சம்பந்தப்பட்ட தனிப் புகைப்படங்களையும் பயன்படுத்தத் தங்களிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ எனப் பத்திரிகைகள் மூலம் விளம்பரத்தை வெளியிட்டார்.

இந்திய சினிமா நட்சத்திரங்கள் யாரும் இது போன்று செய்ததில்லை. இச்செயல் ஊடகங்கள், அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

அடுத்த கட்டமாகப் படத்தில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பான விளம்பரங்கள் இடம்பெறும் வகையில் கட் அவுட், பேனர்களை வைக்க வசூல் வேட்டையை நடத்தினார் லதா ரஜினிகாந்த். பாபா படத்திற்கான படப்பிடிப்பு அரங்கம் சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோ மற்றும் கிண்டியிலும் (கேம்போ கோலா வளாகத்தில்) அமைக்கப்பட்டிருந்தது. பாபா படத்தின் தயாரிப்புப் பணிகளை ரஜினி நேரடியாக கண்காணித்தார். அனைத்து வேலைகளையும் திட்டமிட்டபடி குறித்த நேரத்திற்குள், நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதில் உறுதி காட்டினார் ரஜினி.

படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு ரஜினி பட வாய்ப்பு என்பதற்காக சம்பளத்தை குறைக்கக் கூடாது, வெளிப்படங்களில் அவர்கள் வாங்கும் சம்பளம் இங்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அமுல்படுத்தினார். நாயகி மனிஷா கொய்ராலா, கவுண்டமணி இருவருக்கு மட்டுமே இப்படத்தில் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. 90 நாட்களில் படத்தை எடுத்து முடிக்கத் தெளிவாக ரஜினி திட்டமிட்டார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் தன் எண்ண ஓட்டத்தில் இருக்கும் காளிகாம்பாள் கோவில் அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்வையிட கிண்டி சென்ற ரஜினிக்கு அதிர்ச்சி.

பழமைமிக்க காளிகாம்பாள் கோவிலைத் தவிர்த்து அனைத்து இடங்களும் ரஜினி மனநிலைக்கு மாறாக இருந்தது. லதா ரஜினிகாந்த் வசூல் வேட்டை நடத்திய நிறுவனங்களின் விளம்பரங்கள் அரங்கின் இயல்புத் தன்மையை மாற்றி நவீனத் தோற்றம் தந்தது கண்டு கலங்கிய ரஜினிகாந்த் இயக்குனர் பக்கம் கேள்விக்குறியோடு திரும்பிய போது அவரது ஆட்காட்டி விரல் நகர்ந்தது லதா ரஜினிகாந்த் பக்கம்.

மனைவியிடம் கோபப்பட முடியாது. ஆனால், தன் விருப்படி அரங்கம் மாற்றப்பட வேண்டும். என்ன செய்தார் ரஜினி? அந்த அதிரடி நடவடிக்கை என்ன? நாளை 1 மணிக்கு.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62 பகுதி 63 பகுதி 64 பகுதி 65

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon