நெல்லையில் காவலர் ஜெகதீஷ் துரையை அடித்து கொன்றவர்களைப் பிடிக்க 7 ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்தின் முதன்மை காவலரான ஜெகதீஷ் துரை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு (மே 6) பரப்பாடி அருகே மணல் கொள்ளை நடப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு விசாரணைக்குச் சென்றுள்ளார். மறுநாள் (மே 7) காலையில் பிணமாக மீட்கப்பட்டார். நான்கு பேர் கொண்ட கும்பல் இவரை கம்பியால் தலையில் அடித்துக் கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகி உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் கூறுகையில், இந்தச் சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய சிலரைக் கைது செய்து விசாரித்துவருகிறோம். மேலும், குற்றவாளிகளை பிடிப்பதற்காக 5 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படையும், 2 உட்கோட்ட ஆய்வாளர்கள் தலைமையில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், எஸ்.ஐதான் தன் கணவரைத் திட்டமிட்டுக் கொலை செய்ததாக காவலர் ஜெகதீஷின் மனைவி சந்தேகம் எழுப்பியுள்ளார். ஐந்து காவலர்கள் இருக்கையில், ஏன் தன் கணவரை மட்டும் தனியாக மணல் கொள்ளையர்களைப் பிடிக்க அனுப்ப வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதுபோன்று, இவரது உறவினர்களும் காவலர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பினர்.