மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

கமலை நேரில் வரச் சொல்லுங்கள்!

கமலை நேரில் வரச் சொல்லுங்கள்!

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் மக்கள் நீதி மையத்தை ஆரம்பித்து தொடர்ச்சியாக அதன் செயல்பாடுகளில் கவனம் செலுத்திவருகிறார். தொழில்நுட்பத்துக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கும் கமல்ஹாசன், உறுப்பினர் சேர்க்கையையும் ஆன்லைன் வழியாகவே நடத்திவருகிறார்.

கடந்த மாதம் தொண்டர்களிடையே காணொளியில் உரையாற்றிய கமல்ஹாசன், நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 5 கிராமங்களைத் தத்தெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கட்சி ஆரம்பித்த பிறகு சென்னையைத் தவிர திருச்சியில் மட்டும்தான் பொதுக்கூட்டம் நடந்திருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தின் பெரும்பாலான கூட்டங்கள் கட்சி அலுவலகம் அமைந்திருக்கும் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை இல்லத்திலேயே நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மக்கள் நீதி மய்யத்தின் கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீபிரியா, சௌரிராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் கட்சியினர் பங்கேற்பது குறித்தும், தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது. கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் ஸ்ரீபிரியா, சௌரிராஜன் ஆகியோர் பதிலளித்தனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 30ஆம் தேதி கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 9 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் பாரதி கிருஷ்ணகுமார், அருணாச்சலம், மூர்த்தி, தங்கவேலு ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் கமல்ஹாசன் காணொளிக் காட்சி முறையில் நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

தமிழகத்தில் கட்சி வளர்த்த பல்வேறு தலைவர்களின் காலடித் தடங்களும் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் படர்ந்துள்ளது. ஆனால் தற்போதுதான் கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசன் கட்சியின் மேற்கு மண்டலத்திற்கு நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்திலேயே நேரில் கலந்துகொள்ளாமல் காணொளிக் காட்சி மூலம் பேசியுள்ளார். கட்சியினரின் ஆலோசனைக் கூட்டத்திலேயே கமல்ஹாசன் காணொளியில் பேசிவருவது மக்கள் நீதி மய்யத்தினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியினரை நேரில் சந்திக்காமல் கமல்ஹாசனால் கட்சியை வளர்க்க முடியாது. எனவே கமல்ஹாசன் ஆலோசனைக் கூட்டங்களுக்கு நேரில் வர வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யத்தினரின் எண்ணமாக உள்ளது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon