மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

ரயில்வே ஊழியர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

ரயில்வே ஊழியர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

ரயில்வே அமைச்சகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால், இன்று (மே 8) முதல் ரயில்வே ஊழியர்கள் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ஏழாவது ஊதிய கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், ரயில்வே துறையை தனியார் மயமாக்கக் கூடாது, தேசிய பென்ஷன் திட்டம் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திங்கள்கிழமை(மே 7) அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் மத்திய நிதி அமைச்சகம், மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் மத்திய ரயில்வே இணை அமைச்சகங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இரண்டு ஆண்டுகளாக எந்தவொரு பயனும் இல்லை.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெற்ற பொது கவுன்சில் மற்றும் பணிக்குழுவின் கூட்டங்களில் இந்திய ரயில்வே கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இந்தியா முழுவதும் கூட்டமைப்புடன் இணைந்த தொழிற்சங்கங்களின் அனைத்து கிளைகளிலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. மேலே கூறப்பட்ட கோரிக்கைகள் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் பெரிய அளவிலான மக்கள் எண்ணிக்கையில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon