மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 24 பிப் 2020

ஐபிஎல்: அந்த கடைசி ஓவர்!

ஐபிஎல்: அந்த கடைசி ஓவர்!

எவ்வளவு குறைவான ரன் அடித்தாலும் அதை வைத்தே வெற்றிபெறக்கூடிய பந்து வீச்சு தன்னிடம் இருப்பதை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று மீண்டும் நிரூபித்தது.

ஐபிஎல் நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

குறைவான ரன்களுக்குள் எதிரணியைச் சுருட்டும் திறன் கொண்ட ஹைதராபாத் அணியின் பலத்தை அறிந்திருந்தும் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

அணியில் மாற்றங்கள்:

பெங்களூரு அணியில் முருகன் அஸ்வினுக்கு பதிலாக மனன் வோராவும், பிரண்டன் மெக்குல்லத்துக்கு பதிலாக மொயீன் அலியும் இடம்பெற்றிருந்தனர்.

ஹைதராபாத் அணியில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை.

ஹைதராபாத் அணிக்குச் சிறப்பான தொடக்கம் அமையவில்லை. அலெக்ஸ் ஹேல்ஸ் (5), ஷிகர் தவன் (12) விரைவாக வெளியேறினர். கேப்டன் கேன் வில்லியம்சன் (56), ஷகிப் அல் ஹசன் (35) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 146 ரன்களை எடுத்தது.

ஓவருக்கு சராசரியாக 7.1 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பெங்களூரு அணியின் பேட்டிங் முதல் ஆறு ஓவர்கள் பவர் ப்ளேயில் சிறப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில் 7 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் என்று வலுவான நிலையில் இருந்த பெங்களூரு அணிக்கு விராட் கோலியின் விக்கெட்டை இழந்தது பின்னடைவாக அமைந்தது. ஷகிப் அல் ஹசன் வீசிய அந்தப் பந்தை கோலி அக்ராஸ் தி லைனில் சென்று அடிக்க முயன்றபோது பேட்டின் விளிம்பில் பட்டு எகிறிய பந்தை தேர்ட் மேன் திசையில் இருந்த யூசுப் பதான் ஒற்றைக் கையால் அருமையாகப் பாய்ந்து பிடித்தார்.

இதன் பிறகு பெங்களூரு அணி வெற்றிக்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

த்ரில் நிமிடங்கள்:

கடைசி ஓவரில் பெங்களூரின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. டெத் ஓவர்களைச் சிறப்பாக வீசும் புவனேஸ்வர் குமாரிடம் பந்து ஒப்படைக்கப்பட்டது.

களத்தில் காலின் டி கிரான்ட் ஹோம், மந்தீப் சிங் ஆகிய இரு மட்டையாளர்கள் இருந்தபோதிலும் அந்த ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் மீண்டும் ஒரு த்ரில் வெற்றியை ருசித்தது.

பந்து வீச்சே பலம்:

ஐபிஎல்லின் இந்த சீசனில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒப்பீட்டளவில் வலுக் குறைந்த மட்டை வரிசையைக் கொண்ட அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத். ஆனால் அதன் பந்துவீச்சு இதற்கு அப்படியே நேர் எதிரானது. பவர் ப்ளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் பந்து வீச்சாளர் படை. இதன் விளைவாகக் கிடைத்த பரிசே புள்ளிப் பட்டியலில் முதலிடம்.

இந்த சீசனில் ஹைதராபாத் அணி நான்கு முறை முதலில் பேட்டிங் செய்திருக்கிறது. அதில் மும்பைக்கு எதிராக 118, பஞ்சாபுக்கு எதிராக 132, ராஜஸ்தானுக்கு எதிராக 151, பெங்களூருக்கு எதிராக 146 என மிகவும் சராசரியான ஸ்கோரையே பதிவு செய்தது. இருப்பினும் தனது சிறப்பான பந்துவீச்சினால் இந்த அனைத்துப் போட்டிகளிலும் எதிரணியைச் சுருட்டி வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத் அணி இந்த சீசனில் மற்ற அணிகளைக் காட்டிலும் சிறப்பான பந்து வீச்சாளர்கள் படையைக் கொண்டிருப்பதற்கு இதுவே சான்றாகும்.

எல்லா அணிகளும் ஏறத்தாழ 10 போட்டிகள் விளையாடி நிறைவுபெறும் நிலையில் உள்ள இந்த லீக் சுற்றில் தற்போது முதலிடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி, இந்தத் தொடரை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அதனை இரவு 7 மணிப் பதிப்பில் காணலாம்...

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon