மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

தனித்து போட்டி: விஜயகாந்த்

தனித்து போட்டி: விஜயகாந்த்

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்று தெரிவித்துள்ள விஜயகாந்த், தேமுதிக மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தேமுதிக நிறுவனரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு இன்று(மே 8) பேட்டியளித்துள்ளார்.

அதில், தமிழக அரசியலில் வெற்றிடம் என்பது இல்லை. அதிமுக, திமுக மற்றும் தேமுதிக ஆகியவை தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நாங்கள் தான் மூன்றாவது அணி” என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் கமலின் அரசியல் வருகை தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்க மறுத்துள்ள அவர், நடிகர்களின் அரசியல் வருகை குறித்து மற்றொரு நடிகரிடம் கேள்வி கேட்காதீர்கள், மக்கள்தான் சிறந்த நீதிபதிகள் என்று தெரிவித்தார்.

மேலும், காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது வெறும் கண் துடைப்பு நாடகம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

“அனைத்துக் கட்சிகளும் ஜூன் மாதம் வரை தங்களின் போராட்டங்களைத் தொடர்வார்கள். பின்னர் முல்லைபெரியாறு விவகாரம் தொடர்பாக தங்களின் போராட்டத்தை மாற்றிக்கொள்வார்கள். எந்த விவகாரத்திலும் அவர்கள் உறுதியாக இருப்பதில்லை. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எந்த போராட்டத்தையும் அவர்கள் நடத்தவில்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மற்ற கட்சிகளை போல் இல்லாமல் காவிரி விவகாரத்தில் தேமுதிக தீவிரமாக உள்ளது என்று கூறியுள்ள விஜயகாந்த், இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதையும் நினைவுகூர்ந்தார்.

“மக்களைப் பாதிக்கும் விசயங்களில் அவர்களுடன் இருக்கவே விரும்புகிறேன்” என்றும் விஜயகாந்த் உறுதியுடன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பாகக் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon