மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

தலைமை நீதிபதிக்கு எதிரான மனு வாபஸ்!

தலைமை நீதிபதிக்கு எதிரான மனு வாபஸ்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான மனுவைத் திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான கபில் சிபில் அறிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவுக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை கடந்த மாதம் 20ஆம் தேதி மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் எதிர்க்கட்சியினர் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவைச் சந்தித்து அளித்தனர். எனினும், இந்த நோட்டீஸை நிராகரிப்பதாக வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.

இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், ”உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்பதாலேயே, எதிர்க்கட்சிகள் அளித்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடனே எதிர்க்கட்சித் தலைவர்கள் நோட்டீஸ் அளித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான பிரதாப் சிங் பாஜ்வா மற்றும் அமீ ஹர்ஷாத்ரே யாஜ்னிக் ஆகியோர் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யாவின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று(மே 7) வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான கபில் சிபில் ஆஜரானார். அவர்களின் முறையீட்டைக் கேட்ட நீதிபதி செலமேஸ்வர், நாளை(இன்று) நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை நீதிபதி சிக்ரி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஏ.கே.கோயல் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் உச்ச நீதிமன்ற சீனியாரிட்டியில் 6 முதல் 10-வது இடம் வரை இருப்பவர்கள்! தீபக் மிஸ்ராவுக்கு அடுத்தபடியாக 2 முதல் 5 வரையிலான சீனியாரிட்டியில் இருக்கும் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் இந்த அரசியல் சாசன அமர்வில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று(மே 8) காலை 10.30 மணியளவில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான கபில் சிபில், 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டதற்கான நிர்வாக உத்தரவின் விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு நீதிபதிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

எனினும், 5 நீதிபதிகள் அமர்வு எப்படி உருவானது என்ற விவரத்தை அளித்தால் மட்டுமே, வாதாடலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய முடியும் என்று கபில் சிபில் தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை வைத்து வாதிடுங்கள் என்று தெரிவித்தனர். இதனையடுத்து மனுவைத் திரும்ப பெறுவதாக கபில் சிபில் அறிவித்தார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon